புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒப்புதல் சான்றிதழ் வழங்க ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் இன்று சோதனை நடந்து வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வரும் சீரங்க பாளையத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோகர், சூரமங்கலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வசந்தகுமார், ஜான்சன் பேட்டையில் உள்ள மருத்துவ பேராசிரியர் சுஜாதா ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை 6:30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மதியம் வரை நீடித்து வருகிறது. இந்த சோதனையில் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் அசப்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மூன்று இடங்களிலும் சேலம் மாவட்டம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார் விஜயபாஸ்கர். அப்போது தன்னுடைய பதவி காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சான்றிதழ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது அந்த மருத்துவமனை புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியான ஒன்று என்று ஒப்புதல் சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை வாங்கும் போது அந்த மருத்துவமனை 300 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இரண்டு வருடங்களாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அனுமதி சான்றிதழ் வழங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை பதிவு செய்துள்ளது. மேலும் இந்தப் புகார் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் , மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர் மற்றும் தாம்பரம் ஆகியவற்றில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி பணியாற்றி வந்தார். அப்போது தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சேலம், தருமபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்கிய டெண்டரில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. அதன்படி இந்த 5 மாவட்டங்களில் சந்தை விலையைவிட மிகவும் அதிகமான விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சுமார் 74 கோடியே 58 ஆயிரத்து 700 ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 26 இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது.