சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40 குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.


இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா பேரிடர் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றனர். இந்த நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என்றார். திமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதிமுக சார்பில் வருகின்ற 16 ஆம் தேதி தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டிய அவர் தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவி வருவதாகவும்; வருகின்ற 2026 ஆம் ஆண்டு மின் கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போது சொத்து வரியை 100% ஆகவும் கடைகளுக்கு 150 சதவிகிதமாகவும் வரியை திமுக அரசு உயர்த்தி உள்ளது. 562 கோடியில் 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது ஆனால் தற்போது திமுக அரசு இத்திட்டத்தை விரைவாக நிறைவேற்றி இருந்தால் வீணாக கலக்கும் தண்ணீரை ஏரியில் நிரப்பி இருக்கலாம். திமுக அரசின் அலட்சியத்தால் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது வேதனைக்குரியது. 



அதிமுக தலைமை அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதன் மூலம் உண்மை தர்மம் நீதி வென்றுள்ளது என்றும் விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் புகழேந்தி அதிமுக உறுப்பினர் அல்ல ஏற்கனவே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து அதிமுகவில் இணைந்த அவரை ஊடகத்தினர் மட்டுமே மிகைப்படுத்திய காட்டுகிறது. அதிமுகவில் யாரை சேர்க்க வேண்டும் சேர்க்கக் கூடாது என்பதை தான் பொதுக்குழு முடிவு செய்யும் என்றார். ஏற்கனவே தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாத முதலமைச்சர் தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் 10 பிரச்சனைகளை வழங்கிடுமாறு கேட்டுள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி தனது தொகுதி உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 பிரச்சனைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.



ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் நிலை தலைகீழாக மாறிவிட்டது என்றார். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணிகளை மட்டுமே முதலமைச்சர் திறந்து வைத்து வருகிறார். அதையும் முழுமையாக செய்வதில்லை என்று விமர்சனம் செய்தார்.