சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.


இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, ”கர்மவீரர் காமராஜரின் வாழ்க்கை ஒரு அரசியல் இலக்கணம். எப்படி வாழவேண்டும் என்பதற்கு அவருடைய வாழ்க்கையே ஒரு சான்று. இறக்கும் தருவாயில் அவரது இல்லத்தில் 60 ரூபாயும், 10 கதர் வேட்டிகளுமே மட்டுமே இருந்து வாழ்ந்த மனிதர். இந்தியாவின் கிங்மேக்கர் என்ற வார்த்தைக்கு பொருள் வடிவம் கொடுத்த தலைவர். இரண்டு முறை பிரதமரை உருவாக்கியவர். காமராஜர் ஆட்சி காலத்தில் மட்டும் தான் ஒன்பது அணைகள் கட்டப்பட்டது. குறிப்பாக மூடிக்கிடந்த 6 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. 12000 பள்ளிகள் புதிதாக 9 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் தான் கல்விக்கண் திறந்தவர் என்று காமராஜர் என்று கூறுகிறோம். தமிழகத்தில் படிப்பவர்கள் சதவீதம் 37 சதவீதமாக காமராஜ் காலத்தில் கொண்டுவரப்பட்டு சாதனை செய்தார் .



காமராஜர் ஆட்சிக்குப் பிறகு தமிழகம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டு வருகிறது. மது மூலமாக வரும் பணம் வேண்டாம் என்று காமராஜர் ஆட்சி செய்தார். ஆனால் தற்போது நடைபெறும் ஆட்சியில் 45 ஆயிரம் கோடி மதுவால் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டிய ஒரே அணை மழை வெள்ளத்திற்கு தங்காமல் அடித்து சென்று விட்டது. கர்மவீரர் காமராஜர் ஆட்சியை கொடுக்கிறோம் என காங்கிரஸ் கட்சிக்கு சொல்கிறார்கள் அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதியும் இல்லை” என்று விமர்சனம் செய்தார்.


மேலும், “தமிழகத்தில் காமராஜரின் ஆட்சி வரவேண்டும் என்றால் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தர முடியும். இதற்கான இறுதி வாய்ப்பு 2026 ஆம் ஆண்டு இணைந்து பயன்படுத்த வேண்டும்.


கர்மவீரர் காமராஜரின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது நம்மைப் போன்ற அரசியல்வாதிக்காக அல்ல. சாதாரண மக்களுக்காக தான் கொண்டுவர வேண்டும். விவசாயத்திற்கும், ஏழை மக்களுக்கு, தரமான கல்வி தர வேண்டும் என்பதற்காக காமராஜரின் ஆட்சி கொண்டு வரவேண்டும். எனவே காமராஜர் ஆட்சிக்கு நிகரான ஆட்சி பாஜகவின் மோடி ஆட்சி நடக்கிறது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்போது நிகராக இருக்கும். காமராஜரின் பாதையில் மோடி சென்று கொண்டிருக்கிறார்” என்றார்.