சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்தபோது மத்திய அரசு காலை உணவு திட்டத்தை ஊக்குவித்து உள்ளது. இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம். அதற்கான நிதியும் மத்திய அரசு கொடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்தை மாநில அரசு முழுமையாக நிறைவேற்ற ஆரம்பித்தால், அதற்கான நிதி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு விதண்டாவாதமாக புதிய கல்விக் கொள்கையை ஏற்று கொள்ளமாட்டோம்.  காலை உணவு திட்டத்தை நாங்கள்தான் கண்டுபிடித்து உள்ளோம் என திமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது. காலை உணவு திட்டம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது. இதில் மாற்றுக் கருத்தும் இல்லை, யார் கொண்டு வந்தாலும் மக்களுக்கு பயன்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் திராவிட மாடல் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாது காலை உணவு திட்டம் மட்டுமில்லாமல் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் குழந்தைகளுக்கும் சத்தான உணவு கொடுக்கவேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. குறிப்பிட்ட வயதில் உள்ள மாணவ, மாணவிகள் சத்தான உணவு எந்தளவிற்கு சாப்பிடவேண்டும் என்று நிர்ணித்துள்ளது. அதை தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து 100 சதவீதம் தமிழகத்தில் கொண்டுவர முனைப்பு காட்டவேண்டும், அரசியல் காட்டக்கூடாது. நிதி பற்றாக்குறை இருந்தாலும் மத்திய அரசு கொடுக்க தயாராக உள்ளது. தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்காக குழு அமைத்து அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து விளக்கமாக பேசப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பெயரை மாற்றி அப்படியே வைத்துள்ளனர். தமிழக அரசு இன்னும் சிறப்பாக செய்யட்டும். குறிப்பாக ஊட்டச்சத்தை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கு என்ன வேண்டுமானாலும் மத்திய அரசு செய்யும் இது குறித்து புதிய கல்வி கொள்கையில் பேசி உள்ளேன்..



நீட் தேர்வு:


நீட் தேர்வு பொருத்தவரை நீட் தேர்வு வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளோம். தமிழகம் இந்தாண்டு தான் சிறப்பான செயல்பட்டு உள்ளது. 59 சதவீதம் விழுக்காடு தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட்தேர்வு நடத்தும் அமைப்பில் குளறுபடி உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது. தவறுகளை சரி செய்து வருகின்றனர். நீட் தேர்வில் வினாத்தாள் வெளியானது, ஒரு சில இடங்களில் நடந்துள்ளது. அதில் யார் யார் தவறு செய்துள்ளார்களோ? அதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திமுக நீட் தேர்வை வைத்து தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. நீட்தேர்வு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் வெள்ளை அறிக்கை தரவேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வுக்கு முன்பாக எத்தனை பேர் சென்றுள்ளார்கள், நீட் தேர்வுக்கு பிறகு எத்தனை பேர் சேர்ந்து உள்ளார்கள் என்பது குறித்து தனித்தனியாக பிரித்து தரவேண்டும். இதைக் கொடுத்தாலே தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும். நீட்தேர்வு ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவியாக உள்ளது. டேட்டாவை கொடுக்காமல் வாய்பேச்சை மட்டுமே தமிழக அரசு பேசி வருகிறது .


ஆம்ஸ்ட்ராங் கொலை:


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை வெளியிட்டுள்ள சிசிடிவி உண்மைதான். காட்சிகளில் வந்த நபர்களின் புகைப்படத்தை வைத்து இவர்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லி உள்ளார்கள் என்பது உண்மைதான். ஆனால் கூலிப்படை ஏவிவிட்டது யார்? இதற்கு உதவியாக இருந்தது யார்? இதற்கு மூளையாக இருந்தவர் யார் என்பது குறித்து இதை கண்டுபிடிக்க வேண்டும். திருவேங்கடத்தை என்கவுன்டரில் கொன்ற நிலையில் திருவேங்கடத்தை ஏவிவிட்டவர் யார்? திருவேங்கடம் சொல்ல வந்த உண்மை என்ன? என்பது குறித்து தெரிய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் மரணமா? அல்லது வேறு ஏதாவது மரணமா? என்பது குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் சரணடைந்த ஒருவர் ஏன் தப்பியோட வேண்டும், கையில் துப்பாக்கி வந்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உள்ளது. திருவேங்கடம் ஒரு குற்றவாளி என்பதை ஏற்றுக் கொள்கிறோம். திருவேங்கடத்திற்கு பின்னால் உள்ளது யார் என்பதை தான் எங்களுடைய கேள்வி.



மத்திய அரசு திட்டம்:


மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்துவது இல்லை. பிஎம் கிஷான் திட்டத்தில் எவ்வளவு விவசாய நிலம் வைத்திருந்தால் 6 ஆயிரம் ரூபாய் உதவி பணம் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு அளவு நிர்ணயித்தது. தமிழகத்தில் 43 லட்சம் விவசாயிகள் 2021 விவசாயிகள் பயனடைந்தனர். இன்றைய தினம் 21 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைகிறார்கள். மத்திய அரசின் திட்டத்திற்கு 100 சதவீதம் கெட்ட பெயர் வரவேண்டும் என்பதற்காக நிறைய விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டம் செல்லக்கூடாது என்பதற்காக தடுக்கிறார்கள்.


தமிழக அரசியலில் வந்துவிட்டால் ஆடு வெட்டுவது எல்லாம் சாதாரணம். எனக்கு புதிதல்ல; நான் புகார் கொடுக்கப் போகவில்லை. நாம் மோதிக்கொண்டிருப்பது திராவிட அரசியல். சாதாரண அரசியல் அல்ல. பழிசொல், பொய்யான குற்றச்சாட்டு, பொய்யான புகார் உள்ளிட்டவைகள் சாதாரணம்தான். திமுகவின் முகம் எப்படி உள்ளது என்பது குறித்து தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்பது தான் நான் சொல்கின்ற செய்தி. நாம் இதற்காகவெல்லாம் அஞ்சப் போவதில்லை” என்று பேசினார்.