சேலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. 



ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளை மேம்படுத்துவது, தரமான கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதில் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும், கழிவறைகள் அமைப்பு, குடிநீர் வசதி ஆகிய கோரிக்கைகள் அதிக அளவில் வருகின்றன.


 


ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. மாநிலம் முழுவதும் ஆசிரியர் காலி பணியிடங்கள், பணி நிரவல் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற பணிகள் அடுத்த ஒரு மாதத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்படும். முழுமையான ஆய்வுக்கு பின்னர் எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்பது தெரியவரும். அதற்கு பின்னரே புதிதாக ஆசிரியர்களை நியமிப்பது குறித்து சொல்ல முடியும். தமிழகத்தில் 2013-ல் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வான டெட்-ல் தேர்ச்சி பெற்றவர்கள் 80 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆர்டிஇ சட்டத்தின் படி ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன.


அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கொரோனாத் தொற்றுக்கு பிறகு அரசுப்பள்ளிக்கு அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் மாநில அளவில் பொருளாதாரத்தில் பின் தங்கியதாக 44 வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுபோன்று பின்தங்கிய பகுதிகளுக்கு பணிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். தென் மாவட்டங்களுக்கு ஆர்வத்துடன் பணிக்கு செல்வது போல, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் பணிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன் என்றார்.


 


பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் ரீதியாக தொல்லைக்குள்ளாவதை தடுக்க மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது. போக்சோ வழக்குகளை விரைந்து நடத்தி தண்டனை பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக் கல்வி திட்டம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக எங்களுக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால், 6.6  லட்சம் தன்னார்வலர்களாக பணியாற்றிட பதிவு செய்துள்ளனர். தன்னார்வலர்களை உரிய தேர்வுக்கு பின்னரே தேர்வு செய்கிறோம். மேலும், அவர்களது முகநூல் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை ஆய்வு செய்த பிறகே நியமிக்கிறோம். சாதி மதத்திற்கு ஆதரவாக உள்ள தன்னார்வலர்களை நியமிப்பது இல்லை. இது குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட குழுவும், முதன்மை செயலாளர் தலைமையிலானல மாநிலக் குழுவும் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 35 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பயனடைந்துள்ளனர். எமிஸ் பதிவை பொறுத்தவரை, இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்து அரசுத்துறையினருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு மாணவர்கள் குறித்த தகவல்களை 98 வகையான ஆவணங்களில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால் எமிஸ் செயலியில் ஒரே பக்கத்தில் பதிவு செய்திட முடியும்.


பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார். சில தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது. இதற்காகவே 11-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.