சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் பகுதி சேர்ந்த 87 வயதான மூதாட்டி பாக்கியம், அவருக்கு இரண்டு மகன்கள், மகள்கள் உள்ள நிலையில் அவருடைய கணவர், மகன்கள், மகள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஜெயலட்சுமி என்ற மற்றொரு மகள் மட்டுமே உயிருடன் உள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த மூத்த மகன் ரத்தினவேலின் மகன் வெற்றிவேல் மற்றும் மருமகள் வசந்தகுமாரி சேர்ந்து தன்னை பார்த்துக் கொள்வதாக கூறி, அவருக்கு ஜீவனாம்சமாக எழுதி வைக்கப்பட்ட நிலத்தை செட்டில்மெண்டாக எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூதாட்டி வீட்டில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கால் முறிவு ஏற்பட்டும் சேரன் குடும்பத்தினர் மூதாட்டியை கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே பாக்கியத்தின் மகள் ஜெயலட்சுமி குடும்பத்தினர் உணவு மற்றும் மூதாட்டியை பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தன்னை பராமரித்துக் கொள்வதாக கணவர் ஜீவனாம்சமாக தன்னுடைய பெயரில் எழுதி வைத்த சொத்தை மூத்த மகனின் பேரன் மற்றும் மருமகள் தானசெட்டில்மெண்டாக எழுதி பெற்றுக் கொண்டதை ரத்து செய்யக்கோரி தபால் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு மனுவாக மூதாட்டி அளித்துள்ளார். இந்த நிலையில் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் கால்முறிவு ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் தபால் மூலமாக எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க நினைவூட்டும் விதமாக மனு கொண்டு வந்தார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



இதேபோன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தன்று அம்பேத்கர் அவர்களுக்கு காவி உடை அணிந்தும் திருநீறு குங்குமம் பொட்டு வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இது தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த செயலை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் மற்றும் பெரியாரைத் தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கருக்கும் காவி உடை அணிந்து பொட்டு வைத்து அவமதித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். சேலம் மாநகர மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.