வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக 30 வார்டுகளில் போட்டியிடுகிறது. அதனையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையடுத்து 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் சமயா ராஜா இன்று திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம். சுப்ரமணி தலைமையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் சேலத்தை சேர்ந்த சையத் ஜான் என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போல வேடமணிந்து, வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பொழுது கடந்த 8 மாத கால ஆட்சியில் தமிழக முதல்வர் குறுகிய காலத்தில் தமிழக மக்களுக்கு ஆற்றி வரும் பணிகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
தமிழக முதல்வர் போல் வேடமணிந்தவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதோடு, சிறு குழந்தைகளை கொஞ்சியும், அவர்களுடன் செல்பி எடுத்தும் குழந்தைகளை மகிழ்வித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் கிழ்சியடைந்த வாக்காளர்கள் தங்களது வாக்கு உதயசூரியனுக்கு தான் என கூறி திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்