பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மத்திய மற்றும் மாநில பகுதி திட்டமான சில்க் சமக்ரா திட்டங்களின் கீழ் 847 பட்டு விவசாயிகளுக்கு 9 கோடியே 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


 


பின்னர், நிகழ்ச்சியில் பேசிய மாநில குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  "தமிழகத்திற்குத் தேவையான பட்டு வெளியே வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றுவதற்காக தமிழகத்தில் பட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்திடும் வகையில் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூ.18.62 கோடியும், 2022-2021 ஆம் நிதியாண்டில் ரூ.18.37 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பட்டு விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பவர் டிரில்லர் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.87,500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1.20 லட்சம் வழங்கப்படுகிறது. பட்டு விவசாயிகளுக்குத் தேவையான உபகரணங்கள், தளவாடப் பொருட்கள், பல்நோக்கு பட்டு ஆலோசனை மையம் விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப்படுகிறது. பட்டு வளர்ச்சித்துறை கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வரை 44,627 ஏக்கர் மல்படி சாகுபடி செய்யப்பட்டது. இந்த பரப்பு 2021-ம் ஆண்டு 49,669 ஏக்கராகவும், 2022-ம் ஆண்டில் 55,840 ஏக்கராகவும் அதிகரித்துள்ளது.  பட்டு உற்பத்தியில் 22,299 விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 28,173 ஆக விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 11,382 ஏக்கர் அளவில் கூடுதலாக மல்பரி சாகுபடி உயர்ந்த நிலையில், புதிதாக பட்டு உற்பத்தியில் 5874 விவசாயிகள் புதிதாக இணைந்துள்ளனர். பட்டுத் தேவையில் தன்னிறைவு பெறத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது" என்றார்.


 


விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "100 சதவீத லாபம் கிடைத்திடும் வகையில் குறுகிய காலபயிர் சாகுபடி அமைந்துள்ளது. காய்கறிகள், சிறுதானியங்கள் எவ்வித மருந்து, உரம் தேவையின்றி வளர்ந்த விவசாயிகளுக்கு லாபம் தருகிறது. பருவநிலை மாறுபாடு காரணமாக மழை குறைந்ததால் விவசாயிகள் கிணற்று நீர்ப்பாசனத்திற்கு மாறினர். அவர்களுக்கு உதவிடும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இலவச மின்சாரம் திட்டத்தை செயல்படுத்தினார். இதன்மூலம், மிளகாய், மல்லி, கேழ்வரகு, சோளம், பருத்தி உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். கரும்பு மற்றும் நெல்லுக்கு அரசின் சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பிறகு வாழை மற்றும் வெற்றிலை உற்பத்தி குறைந்து விட்டது. 40 வருடம் முன்பு விவசாய நிலங்களில் களை அதிகம் இல்லை. தற்போது களை அதிகமாக வருவதால் அவற்றை நீக்க உபகரணங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் விவசாயம்தான் அடிப்படை. பசித்தால் பணத்தை திங்க முடியாது. உணவைத் தான் சாப்பிட முடியும். விவசாயி நன்றாக இருந்தால்தான், நாடு செழிப்பாக இருக்க முடியும் என்பதால் விவசாயிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பட்டு விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் பட்டு நூற்பாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.  


இதைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் பேட்டி கேட்டபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிடுவதாக தெரிவித்தது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை, மத்திய அமைச்சர்களின் பட்டியலை தெரிவித்திருப்பார் என்று கூறிவிட்டு பேட்டியளிக்காமல் சென்றுவிட்டார்.