தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் விலையும், சிறுதானியங்கள மூலப்பொருட்களாக கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் சிறு சிறு தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. 

 

 

தருமபுரி மாவட்டத்தில் போதிய நீர் பாசன திட்டங்கள் இல்லாததால், வானம் பார்த்த பூமியாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4,49,777 ஹெக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 43.52 சதவீத விவசாய நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெறுகிறது. மேலும் மீதமுள்ள 56.48 சதவீத நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்யப்படுகிறது.

 


 

தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு பொழியும் இயல்பான அளவு மழை 853.10 மில்லி மீட்டர். இங்குள்ள விவசாயிகள் மழையை நம்பி ராகி, சோளம், சாமை, வரகு, தினை, பச்சைப்பயறு, கொள்ளு, தட்டைப்பயறு, காராமணி, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களை 50 ஆயிரத்துக்கு அதிகமான ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்து வந்தனர். இதனால் தருமபுரி மாவட்டம் சிறுதானிய உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக பெயர் பெற்றது.

 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாத காரணத்தால் சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.  மேலும் சிறுதானியங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் சிறுதானிய சாகுபடி பரப்பு பாதிக்குப் பாதியாக குறைந்து வந்தது. தற்போது தமிழக அரசு முதல் முறையாக விவசாயத்திற்காக தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக உள்ள சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடனுதவிகள், மானியத்தில் இடுபொருட்கள் போன்ற உதவிகளை அரசு செய்ய வேண்டும்.

 

அதேபோல் சிறுதானியங்களைப் மதிப்புக்கூட்டும் பொருட்களாக மாற்றுவதற்கு தேவையான சிறுசிறு தொழிற்சாலைகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதே போல் வேலை வாய்ப்பின்றி வெளியூர் செல்லும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தர முடியும்.

 

அதே போல் சித்தேரி, வத்தல்மலை போன்ற மலை கிராமங்களில் சிறுதானியங்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மலை கிராமப் பகுதிகளில் சிறு சிறு தொழிற்சாலைகள் அமைத்து மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், வருவாய் பெறுகுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும். எனவே வருகிற 14-ஆம் தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள விவசாயத்திற்கான தனி நிதிநிலை அறிக்கையில் தருமபுரி மாவட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறுதானிய உற்பத்தி விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்