காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் தமிழக எல்லையன பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து வருகிறது. இன்று காலை வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 6,500 கன அடியாக குறைந்தது.காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கடந்த மே மாதத்திற்கு பிறகு காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது.
தருமபுரி அருகே 31 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரியில், கிராம மக்களும் விவசாயிகளும் சிறப்பு பூஜை செய்து மலர் தூவி வழிபட்டனர்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பாலவாடி கிராமத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் அருகில் உள்ள ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரி நீரால் தண்ணீர் நிரம்புகிறது. மேலும் சின்னார் அணை நிரம்பி ஆற்றில் உபரி நீர் வரும்பொழுது அருகில் உள்ள ஏரிகளுக்கெல்லாம் தண்ணீர் வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், ஏரிகளுக்கான வரத்து கால்வாய் பராமரிப்பு செய்து தூர்வாரப்படாதாலும், சின்னாறு உபரி நீர் பாய்கின்ற ஏரிகள் முழுவதும் வறண்டு காணப்பட்டு வந்தது. இந்நிலையில் பாலவாடி ஏரி சுமார் 30 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் மேய்ச்சல் நிலமாக காட்சியளித்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் சின்னாறு அணை நிரம்பி கடந்த நான்கு மாதங்களாக தண்ணீர் உபரியாக ஆற்றில் செல்கிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் பாலவாடி ஏரி 31 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனை கண்ட கிராமத்தில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பாலவாடி ஏரிக்கரையில் சிறப்பு பூஜை செய்து, ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரில் மலர் தூவி வழிபாடு நடத்தினர். இந்த சிறப்பு பூஜையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி உள்ளிட்டார் கலந்து கொண்டு மலர் தூவினர்.