தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையேற்று நடத்தினார். இதில் காய்கறிகளை வைத்துக்கொண்டு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதைத்தொடர்ந்து கண்டன உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அமைச்சர்களுக்கு விலை உயர்வு குறித்து எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை பாருங்கள் என்று வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார். பக்கத்து மாநிலத்தை எதற்கு பார்க்க வேண்டும். விலைவாசி உயர்வை எவ்வாறு தடுக்கபோரார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள், வேளாண்மை அமைச்சர்கள் சொல்ல தெரியவில்லை என்றாலும் தமிழக முதல்வராவது இது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார். தமிழக முதல்வர் எப்பொழுதும், எடப்பாடி பழனிசாமி குறித்து மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அவரை எதுவும் செய்ய முடியாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பள்ளிக்கூடத்தில் பயின்று, ஜெயலலிதா அவர்களிடம் பதக்கம் வென்று அரசியலுக்கு வந்தவர். அதிமுகவை ஒடுக்கவும், அடக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள். இது ஒருபோதும் பலிக்காது என்றும் கூறினார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும். விலைவாசி உயர்வு குறித்து கூட்டணி கட்சிகளில் இருக்கும் கம்யூனிஸ்ட்கட்சிகள் வாய்திறக்க மறுக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிற்கு ஆதரவான போராட்டங்களை மட்டுமே நடத்தி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக அதிமுக கட்சி தான் போராடி வருகிறது. முதலமைச்சராக ஸ்டாலின் நீடித்தால் நடிகர் மனோரமா ஒரு திரைப்படத்தில் உயிருடன் இருக்கும் கோழியை வைத்துக்கொண்டு, சாப்பிட்டுவிட்டு கோழிக்கறி சாப்பாடு என்று கூறுவர் அந்த சினிமா காமெடி காட்சியை குறிப்பிட்டு விமர்சனம் செய்தார். தக்காளி, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை பார்த்துக் கொண்டுதான் சாப்பிடமுடியும், பயன்படுத்த முடியாது. எனவே திமுக ஆட்சிக்கு எச்சரிக்கை விடும் விதமாக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது என்றார்.



அதிமுக ஆட்சியில் இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் செந்தில் பாலாஜியை சிறையில் வைப்பேன் என்று பேசியிருந்தார். திமுக ஆட்சி வந்தால் முதலில் கைது செய்யப்படுவது செந்தில் பாலாஜி தான் எனவும் பேசியிருந்தார். செந்தில் பாலாஜி ஊழலால் திளைத்தவர் என்பதை உணர்ந்துதான் அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜி கைது செய்தபோது ஒட்டுமொத்த அமைச்சரவையும் வீட்டின் முன் இருந்தது. ஆனால் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது யாரும் செல்லவில்லை என்றார். 30 ஆயிரம் கோடியின் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அமைச்சருக்கு இலக்காக இல்லாத அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவிற்காக உழைத்தவர், பாடுபட்டவர்களுக்கு இலக்காக இல்லாத அமைச்சர் பதவி கொடுக்க வேண்டியதுதானே எனவும் கேள்வி எழுப்பினார்.


நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் மோடியையும், அமலாக்கத் துறையையும் பார்த்தும் பயம் இல்லை என்று அமைச்சர் உதயநிதி சவால் விடுகிறார். சவாலா விடுகிறார்? அடுத்தது உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு தான் ரைடு வரப்போகிறது. உனக்கு அரசியல் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி நினைக்க வேண்டாம், பழனிமலைக்குசென்று, சாமி கும்பிட்டு வந்தால் அனைத்தும் நடக்கும் என்றும் கூறினார். தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஆர்ப்பாட்டம் தான் நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. தற்போது திமுக ஆட்சி மக்கள் பயந்து பயந்து இருக்கிறார்கள். மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிச்சாமி தான் வீரமுழக்கமிட்டார். தற்போது கொடுக்கும் ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் அல்ல அப்ளிகேஷனுக்கான டோக்கன் என்றும் பேசினார்.



திமுக ஆட்சியில் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்து வருகிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எவ்வாறு சம்பாதித்தார் என்று சொல்லிக்கொடுங்கள், நாங்கள் அனைவரும் பகிர்ந்து 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறோம். அதை வைத்து 500 கோடிக்கு லாபம் சம்பாதித்து குறித்து சொல்லிக்கொடுங்கள் என்று கிண்டலடித்தார். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று துரைமுருகன் டெல்லிக்கு சென்றிருக்கவே வேண்டாம். தமிழக முதலமைச்சர் கர்நாடகவிற்கு சென்றிருந்தாரே, காவிரி தண்ணீரை திறந்துவிடுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கலாம் என்று தெரிவித்தார். தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்றால் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறி இருக்கலாமே? தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார் என்று விமர்சனம் செய்தார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கிடைக்கின்ற துரதிஷ்டம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். சேலம் மாவட்டத்தில் திமுககட்சி பதவியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, அதிகாரமிக்க அரசு விழாக்களின் திறப்பு விழா செய்வதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கும் வருகை தருகிறார். இது சட்டத்திற்கு முரணானது. இதுதவறான முன்னுதாரணம், இந்த விஷயம் தொடர்ந்து நடந்தால் நீதிமன்றத்தை நாட தயாராக உள்ளோம் எனவும் எச்சரித்தார். நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வரும்போது தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார் என்றும் கூறினார்.