சேலம் மாநகர் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக புகார் தெரிவித்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் முட்டி போட வைத்து மிரட்டியதாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவிகள் தெரிவித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டிய பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்தும், மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி நேற்று காலை பள்ளி வளாகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறி அதிகாரிகளிடம் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், “பள்ளியில் நீண்ட நாட்களாக கழிவறை சுத்தம் செய்யாமல் உள்ளது. அதேபோன்று குடிநீர் தொட்டியும் பராமரிப்பு இன்றி இருப்பதால் பதில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் உருவாகியுள்ளது. அதனை தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போது அவர் நடவடிக்கை எடுக்காமல் இரண்டு மாணவிகளை முட்டி போட வைத்து தண்டித்துள்ளார். எனவே கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் மதிப்பெண் குறைத்து விடுவதாக மிரட்டுகின்றனர். அதற்கும் அதிகாரிகள் உறுதியளித்து தர வேண்டும் அதன் பின்னரே போராட்டத்தை கைவிட்டு களைந்து செல்வோம்” என்று கூறினர்.


இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி, குடிநீர் குழாயில் இருந்து வந்த தண்ணீரில் புழு இருந்தது உண்மைதான். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினோம். மாணவிகளை முட்டி போட வைத்து துன்புறுத்தியதாக வரும் தகவல்கள் தவறானது. எங்கள் பள்ளியில் அது போன்று எந்தவித துன்புறுத்தல்களையும் மாணவிகளுக்கு அளிக்கப்படுவது இல்லை. தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆசிரியர்கள் சிலரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகள் அனைவரையும் அழைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் குறை கேட்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது அனைத்து மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராக சென்று பள்ளியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் மாணவிகளின் குறைகளை கேட்டறிந்த அலுவலர்கள் உடனடியாக தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து கழிவறையை சுத்தம் செய்யும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டனர். இதை தொடர்ந்து தலைமை ஆசிரியை தமிழ்வாணி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் மாணவிகளிடம் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவிகள் வகுப்பறைக்கு சென்றனர். தலைமை ஆசிரியரை கண்டித்து அரசு பள்ளி மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த நிலையில், கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்து சேலம் மாவட்ட கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளை வினாத்தாள்கள் தைக்கும் பணியில் ஈடுபடுத்தியதால் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.