சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபலமான ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கு சர்ச்சையில் சிக்கியுள்ளது. டிக்கெட் வாங்கும் அனைவரும் கட்டாயம் பாப்கார்ன் சேர்த்துத்தான் வாங்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க குடும்பத்தாருடன் திரையரங்கு சென்ற நபர் 17 டிக்கெட் வாங்கியுள்ளார். முதல் வகுப்பு டிக்கெட் விலை 200 ரூபாய் என அறிவிக்கப்பட்ட நிலையில் 17 டிக்கெட்டுகளுக்கும் 17 பாப்கார்ன் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து திரையரங்கு நிர்வாகத்திடம் அந்த வாலிபர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை கேண்டின்காரர்கள்தான் இது போன்று செய்கிறார்கள் என கூறியதோடு முறையான பதில் அளிக்காமல் அங்கிருந்து நழுவிச் செல்கிறார். அந்த நபர் போன பின்னர் வேறு வழியின்றி படம் பார்க்க திரைப்பட ரசிகர்கள் சென்றுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த திரையரங்கு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக திரையரங்கு நிர்வாகத்திடம் கேட்டபோது யாரிடமும் கட்டாயப்படுத்தி பாப்கார்ன் வாங்க சொல்லவில்லை. நாங்கள் காம்போ ஆபரில் விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


இது குறித்த ஏபிபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது, இதன் எதிரொலியாக நேற்றைய தினம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையிலான குழு திரையரங்கிற்கு சென்றது. அப்போது டிக்கெட் வாங்கினால் பாப்கார்ன் வாங்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயப்படுத்தியது குறித்து திரையரங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும் இதுகுறித்து தகுந்த விளக்கம் அளிக்குமாறு திரையரங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கினார். இதோடு கேண்டினில் உணவு தரமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான அன்று, இதே ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு கேண்டினில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தின்பண்டங்களை வாங்கியபோது தேதி குறிப்பிடப்படாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்தனர் என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.



மேலும் குளிர்சாதனபெட்டியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாலில் பூச்சிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவலிங்கம் திரையரங்கில் உள்ள இரண்டு கேண்டின்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது தேதி குறிப்பிடாமல் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்து வந்த 150-க்கும் குளிர் பானங்கள், பத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட் டப்பாக்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திரைப்படத்தின் இடைவேளையில் திரையரங்குக்குள் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபடும்போது 50 லிட்டர் பால் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து திரையரங்கு முன்பாக உள்ள கால்வாயில் கொட்டி அழித்தனர். குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட லிட்டர் பால் பாக்கெட்டுகளில் இறந்த பூச்சிகள் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதையடுத்து திரையரங்குக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். திரையரங்குகள் தின்பண்டங்கள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில், திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி, பால் போன்ற உணவுப் பொருட்களில் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இதற்கு உடனடியாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து குறிப்பிடத்தக்கது.