தருமபுரி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு சென்ற இளம்பெண், மனம் திருந்தி வந்ததால், காவல்  துறையினர் எச்சரித்து குழந்தையை ஒப்படைத்தனர்.

 

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில்  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிகோட்டையில் இருந்து தருமபுரிக்கு வந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்து இருக்கையில் இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருந்துள்ளது. தொடர்ந்து  பேருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான நேரத்தில் பேருந்து இருக்கையில், இருந்த அந்த குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பயணிகள் குழந்தையின் பெற்றோரை தேடினர். ஆனால் யாரும் வராத சூழலில் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பயணிகளை அழைத்து வரும் தரகர் பெரியசாமி உடனடியாக குழந்தையை மீட்டு தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் கடை வியாபாரிகள் உதவியுடன் ஒப்படைத்தார்.

 

பின்னர் தருமபுரி காவல் ஆய்வாளர் நவாஸ் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் குழந்தையை விட்டு சென்ற மர்ம பெண் யார் என்பது குறித்து கண்டறிய, பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அப்பொழுது பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த ஒரு மர்ம பெண் சுமார் 2 வயது மதிக்கதக்க பெண் குழந்தையுடன், குளிர்பான கடையில், குளிர்பானம், தண்ணீர் மற்றும் குழந்தைக்கு சிப்ஸ் வாங்கி கொடுத்தும், தான் குடித்து விட்டு, குழந்தைக்கு ஊட்டுவதும் என மாறி, மாறி அருந்திவிட்டு, குழந்தையை தூக்க சென்றார். இதனையடுத்து நின்றிருந்த அரசு பேருந்தில்  முன்பக்கமாக ஏறி, பின்னர் குழந்தையை பேருந்தில் விட்டு விட்டு பின்பக்க படி வழியாக இறங்கி சென்றது பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் வைத்து பார்க்கும் போது,  இந்த பெண் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையா? குடும்ப பிரச்னை காரணமாக தாயே குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்றாரா?  இந்த குழந்தைக்கு உண்மையான பெற்றோர் யார்? என கண்டறியும் பணியிலும் மற்றும் அந்த மர்ம பெண் குறித்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனா்.



 

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியது. இதனால் அச்சமடைந்த குழந்தையை விட்டு சென்ற பெண் தாமக முன்வந்து தருமபுாி நகர காவல் நிலையத்தில் தான் விட்டு சென்றது தவறு என்றும் என் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதனை தொடா்ந்து காவல்துறையினா் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா்.



 

அப்போது வந்தவாசி பகுதியை சோ்ந்த ராஜேஸ்வாி என்றும் தஞ்சாவூரை சோ்ந்த செல்வம் என்பவரை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டை எதிா்த்து காதல் திருமணம் செய்ததாகவும் கணவா் மதுவிற்கு அடிமையானதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வாழ பிடிக்காமல் வாழ்ந்து வந்ததாகவும் சேலத்தில் ஹோட்டலில் பணிபுாிந்து தன் குழந்தையை காப்பாற்ற முடியாமல் தவித்து வந்ததால் குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு செல்ல முடிவு செய்தேன். ஆனால் என் தவறை உணா்ந்து கொண்டேன் என்று கூறினார். குழந்தையை பத்திரமாக பாதுகாப்பதாகவும் பெண் கூறியதால் தாயிடம் குழந்தையை காவல்துறையினா் அறிவுரை கூறி ஒப்படைத்தனா்.