தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பெரும்பாலை அருகே பெத்தானூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த சின்னு மகன் ராஜ்குமார் என்கிற சிவா(33) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார் பட்டுப்பூச்சி மற்றும் காளான் வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த உறவினர் கணேசன் மகன் திவாகர் (23) உறவினர்களான இவர்களுக்கு ஏற்கனவே நிலப் பிரச்சனை சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் ராஜ்குமார் பெரும்பாலை சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது பெத்தானூர் சாலையில் திவாகர், ராஜ்குமாரை வழிமறித்து, நிலப் பிரச்சினை குறித்து தகராறு செய்துள்ளார். அப்போது பிரச்சினை அதிகரித்த போது, திவாகர் தான் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்த ராஜ்குமார் பயந்து ஓடியுள்ளார். தொடர்ந்து திவாகர் பட்டா கத்தியை கையில் வைத்து கொண்டு, ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினார். இதில் ராஜ்குமாருக்கு உடலில் கழுத்து, தலை, வலது கை, வயிற்றுப் பகுதி, தொடை என ஆறு இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அப்பொழுது அங்கு வந்த பொதுமக்கள் திவாகரை தடுக்க முற்பட்டபோது, அவர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெரும்பாலை காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து திவாகரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜ்குமாரை வெட்டிவிட்டு தலைமறைவான திவாகரை பெரும்பாலை காவல் துறையினர் பெரியூர் மலை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர். தொடர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்த குற்றவாளி, இருபத்தி நான்கு மணி நேரத்தில் பெரும்பாலை காவல் துறையினர் பிடித்து கைது செய்தனர். காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டினர். மேலும் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட திவாகர் சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என கூறப்படுகிறது. மேலும் சினிமா பானியில் பட்ட பகலில் ஒருவரை சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிய சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.