சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக பகுதி செயலாளரின் மகன் சந்தோஷ் குமார். ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு புதிதாக சரக்கு வாகனம் ஒன்று வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதி போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 



அப்போது அவ்வழியாக வந்த சந்தோஷ் குமார் மது போதையில் மினி ஆட்டோவில் வந்ததாக தெரிகிறது. அப்போது போக்குவரத்து காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தபோது மது போதையில் இருப்பதை உறுதி செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்போது மதுபோதையில் நடந்து சென்று அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் ஒரு லிட்டர் வாங்கி வந்துள்ளார். பின்னர் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதி சந்தோஷ் குமார் ஊற்றிக்கொண்டு தீ பற்றவைத்துக்கொண்டுள்ளார் என காவல்துறையினர் கூறினர். இதனைப் பார்த்த காவல்துறையின் உடனே விரைந்து வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.






 


இதுகுறித்து விசாரித்தபோது சந்தோஷ் குமார் புதிதாக சரக்கு வாகனம் வாங்கியதற்காக நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து விட்டு அவரும் மது அருந்தியுள்ளார். குறைந்த அளவு மது மட்டுமே கொடுத்திருந்த சந்தோஷ் குமார் போதையில் இருந்து தெளிந்த பின் வாகனத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக கொண்டலாம்பட்டி அரசு மதுபான கடைக்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் கடையில் நின்று கொண்டிருந்த போது அங்கு மதுபோதையில் இருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் குடிபோதையில் வண்டி ஓட்டியதாக சந்தோஷ் குமாரை காவல்துறையிடம் கூறிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூடி 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் காவல் துறையினருக்கும் சந்தோஷ் குமாருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் விரக்தியடைந்த சந்தோஷ் குமார் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. வாலிபர் நடுரோட்டில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)