தருமபுரி ரயில் நிலையம் அருகே மணி என்பவர் 10 வருடமாக டீ கடை நடத்தி வருகிறார். கடந்த செவ்வாய் கிழமை வழக்கம் போல் கடை திறந்து உள்ளார். அப்பொழுது டீ குடிக்க வந்த ஒரு நபர் தன் கையில் கொண்டு வந்த பையை மறந்து அங்கே விட்டு சென்றுள்ளார். பின்னர் டீக்கடை உரிமையாளர் மணி கடையை சுத்தம் செய்யும் பொழுது அங்கு ஒரு பை இருந்துள்ளது. இதனை டீ அருந்த வந்தவர்கள் தான், யாரோ தவறுதலாக விட்டு சென்று இருப்பார்கள் என்று பையை பத்திரமாக எடுத்து வைத்திருந்தார். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் உரிமைகோரி வரவில்லை. இதனால் பையை திறந்து பார்க்கும் பொழுது உள்ளே புதியதாக வாங்கி வந்த 11 சவரன் தங்க நகை இருந்துள்ளது.
அதனையடுத்து உடனடியாக அவர் நண்பர்களின் உதவியோடு அந்த பையை எடுத்துக் கொண்டு நகர காவல் நிலையத்துக்கு சென்று காவல் ஆய்வாளர் நவாஸிடம் நடந்ததை கூறி அவரிடம், தங்க நகை பையை பத்திரமாக ஒப்படைத்தார். பின்னர் வழக்கம் போல் மணி டீ கடைக்கு சென்று விட்டார். அதனையடுத்து பையை தொலைத்தவர் மணி டீ கடைக்கு வந்து தன்னுடைய கைபையை காணவில்லை எனவும், நீண்ட நேரமாக தேடிக் கொண்டிருக்கிறேன், இங்கு ஏதோ விட்டு விட்டு சென்று விட்டேன என பார்க்க வந்தேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது உங்களுடைய கைபை என்னிடம் தான் பத்திரமாக இருந்தது. ஆனால் பையை திறந்து பார்க்கும் போது அதில் நகை இருந்ததால், நான் அதை தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துள்ளேன் நீங்கள் அங்கு சென்று வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவர் நகர காவல் நிலையத்திற்கு சென்று இது என்னோட நகை, என்னோட பை தான் என்று கூறி, அதில் 11 சவரன் தங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நகைக்குரிய உரிய ஆவனங்களை காவல் ஆய்வாளர் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து உரிய ஆவணங்களை காண்பித்ததால், அதை நகர காவல் ஆய்வாளர் பத்திரமாக தங்க நகையை ஒப்படைத்தார். இந்நிலையில் டீ கடையில் தவறிவிட்டு சென்று தங்க நகையை காவல் துறையினரிடம் நேர்மையாக ஒப்படைத்த, மணிக்கு காவல் துறையினர் மற்றும் தருமபுரி நகர பொது மக்கள் பாராட்டி வாழ்த்தினர்.