சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் தறித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி மற்றொரு மகள் அனிதா. கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி வெங்கடாசலம், அவரது மனைவி மற்றும் மகள் பூங்கொடி ஆகியோர் ஒன்றாக சேலம் உத்தமசோழபுரம் அருகே புத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மாளின் தாய் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது உத்தமசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருசக்கர வாகனம் மூலமாக சாலையை கடக்க முயன்ற போது, அதிவேகமாக வருகை தந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.


இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடாசலம், அவரது மனைவி மாரியம்மாள், மகள் பூங்கொடி ஆகிய மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் விபத்தில் மூவரையும் 50 மீட்டர் தூரத்திற்கு கார் இழுத்துச் சென்றது. 


இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மாரியம்மாள் மற்றும் அவரது மகள் பூங்கொடி இருவரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடாசலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காருடன் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விபத்து கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்த நிலையில் வெங்கடாசலத்தில் மற்றொரு மகள் அனிதா தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை இழந்து தவித்து வந்தார். மாற்றுத்திறனாளியான அனிதாவிற்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர். பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ள அனிதாவின் அனைத்து செலவுகளையும் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனிதாவிற்கு ரூ. 2.48 லட்சம் மதிப்பிலான வீடு கட்டுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அனிதாவிடம் வழங்கினார். மேலும் மாணவி அனிதாவின் கல்லூரி அட்மிஷன், கல்வி செலவு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.