தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியர் சுலோச்சனா தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கிருஷ்ணன் மற்றும் சுலோச்சனா இருவரையும் அடித்து படுகொலை செய்து விட்டு பணம், நகை, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு இவற்றை கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து தோட்டத்தில் தனியாக வசித்த வந்த வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 


 

தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது இவர்களது ஏடிஎம் கார்டு வைத்து திருப்பூரில் பணம் எடுத்து தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில்  பில்பருத்தி பகுதியைச் சார்ந்த வேலவன், பிரகாஷ்ராஜ், முகேஷ், ஹரீஸ், சந்துரு, எழிலரசன் ஆகிய 6 பேர் பணத்திற்காக முதியவர்களை கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அவர்களுடைய செல்போன் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 


 

இதனைத் தொடர்ந்து ஆறு பேரையும் பொம்மிடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தம்பதியினரின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு, 5 சவரன் தாலி கொடி, 18,000 ரொக்கம் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து ஆறு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வயதான தம்பதியரை கொலை செய்த வழக்கில் கைதான, பிரகாஷ்ராஜ், முகேஷ், சந்துரு ஆகியோர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், முகஷ், சந்துரு, மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.

 


 

இதனை தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள பிரகாஷ் ராஜ், முகேஷ், சந்துரு ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர். அதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் தருமபுரி காவல் துறையினர் வழங்கினர்.