ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர்கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தனர். பின்னர் பூங்காவில் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட மலர் அலங்காரத்தினை கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்காடு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவியினை அமைச்சர்கள் வழங்கினர். 



நிகழ்ச்சியில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு முதலமைச்சர் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையில் ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியேற்றது முதல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. இதனால் சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறந்து விடுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு ஆண்டுக்கு கூடுதலாக 2 இலட்சம் டன் நெல் கிடைக்கிறது. முதலமைச்சர் தகுந்த துறையை நமது வேளாண்மைத்துறை அமைச்சருக்கு வழங்கியிருக்கிறார். குறிப்பாக, பாலமலை பகுதி மலைவாழ் மக்களின் 100 ஆண்டுகால கனவாக சாலை வசதி இருந்து வந்ததை அறிந்து, ரூ.31.53 கோடி மதிப்பீட்டில் தார் சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல், கருமந்துறையில் உள்ள 2,000 குடும்பங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்காட்டில் ரூ.11 கோடி செலவில் 3 கிணறுகள் வெட்டப்பட்டு தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் வருகின்ற ஜூன் மாதம் 11 ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்து ரூ.1,300 கோடி மதிப்பீட்டிலான முடிவற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். முதலமைச்சர் தலைமையிலான அரசு சேலம் மாவட்டத்திற்கு இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்படவுள்ளது என்று கூறினார்.



பின்னர் நிகழ்ச்சி பேசிய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகளின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் உள்வாங்கி வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஏற்காட்டில் இன்றைய தினம் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடைபெறும் ஏற்காடு மலர்க்கண்காட்சி வண்ண மலர்களைக் கொண்டும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டதால், ஏற்காடு ஊட்டியைப் போல் காட்சியளிக்கிறது. இந்த ஆண்டின் வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கையில் ஏற்காடு தாவரவியல் பூங்காவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தாவர அலங்கார வடிவங்கள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மிளகு மரபணு வங்கி அமைப்பதற்காக ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 9,749 ஹெக்டர் பரப்பளவில் தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறைக்கு ஏற்காட்டில் 40 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைந்துள்ளது. தோட்டக்கலைத் துறையின் சார்பில் வாசனைப் பூண்டு, அவகோடா மற்றும் மிளகு பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்காட்டினுடைய மேம்பாட்டிற்காக முதல்வர் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப்படவுள்ளது என்று கூறினார்.