தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை, மதிகோன்பாளையம், தருமபுரி நகரப் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் முன்பும், பகல் நேரங்களில் கடைகளுக்கு முன்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இருசக்கர வாகனங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதனையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 



 

 

தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, நகரப்பகுதி குடியிருப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து  காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த  அர்ஜுனன் (29), சிக்கபூவத்தி  பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (23), தருமபுரி அடுத்த டீக்கடை குரும்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஷ் வரன், (19), தருமபுரி  குப்பாகவுண்டர் தெருவை சேர்ந்த சுரேந்தர் (19) ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.

 


 

இதில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4 புல்லட் பைக், மூன்று பல்சர் பைக்குகள், ஒரு ஹோண்டா பைக் இரண்டு ஸ்பிளென்டர் பைக் என 11 பைக்குகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். 



 

பச்சை மிளகாய் விலை உயர்வால் தருமபுரி விவசாயிகள் மகிழ்ச்சி 

 

தருமபுரி   மிளகாய்அதிக காரத் தன்மை கொண்டதால், சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அதிகமாக விற்பனைக்கு செல்கிறது. தருமபுரி மாவட்டத்தில்  மிளகாய் விளைச்சல் இல்லாத நேரத்தில், வத்தலகுண்டு, களக்காடு, தேனி போன்ற பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது. 

 

 



 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்ததால், பச்சை மிளகாய் விளைச்சல் அதிகரித்தது. இதனால் வரத்து அதிகரத்து, விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட  விலைக்கு  வாங்கி சென்றனர். இந்த விலை சரிவால், சில விவசாயிகள் மிளகாய் வேக வைத்து காய்ந்த மிளகாய் வத்தல் போட்டனர்.

 



 

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன் பச்சை மிளகாய் வரத்து குறைவானதால், பச்சை மிளகாய் விலை கிடுகிடுவென உயர்ந்து, கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. மேலும் தொடர்ந்து 2 மாதமாக பச்சை மிளகாய் விலை ரூ.50 முதல் 60 என மாறி மாறி சீரான நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் வெளி மார்கெட்டில் கிலோ ரூ.70 முதல் 80 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.