தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்த இருப்பதாக தென் மண்டல இயக்குனர் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து வனத் துறையினர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று பென்னாகரம் அடுத்த பவளந்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதியை சேர்ந்த வினோத், நெருப்பூர் கார்த்திக் ஆகிய மூன்று பேரும் பென்னாகரம் வழியாக காரில் தருமபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சேட்டு மற்றும் சக்திவேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காருக்கு பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தனர். அப்போது தருமபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் அருண் தலைமையில் 8 பேர் கொண்ட குழு தருமபுரி அடுத்த சோகத்தூர் நான்கு வழி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வேகமாக வந்த சந்தேகத்திற்கிடமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்போது தான் இந்த காருக்கு பாதுகாப்பாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சேட்டு மற்றும் சக்திவேல் அங்கேயே அந்த வாகனத்தை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தொடர்ந்து தப்பக ஓடியவர்களை வனத் துறையினர் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தும், அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் தப்பிவிட்டனர். ஆனால் பிடிபட்ட காரை சோதனை செய்த போது சுமார் 25 கிலோ 400 கிராம் எடை கொண்ட 25 வயது மதிக்கத்தக்க யானையின் தந்தங்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதில் பவளந்தூர் சின்னசாமி, பிலிகுண்டுலு பகுதியை சேர்ந்த வினோத், நெருப்பூர் கார்த்திக் ஆகிய மூவரையும் வனத் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 2 யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு, தப்பி ஓடிய சேட்டு, சக்திவேல் ஆகிய இருவரையும் தப்ப வனத் துறையினர் தேடி வலை வீசி வருகின்றனர். தொடர்ந்து தருமபுரி பகுதியில் காரில் யானை தந்தங்கள் கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.