தருமபுரி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறை சார்பில் நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் இல்லா தருமபுரி என்று உருவாக்க, மாவட்டத்தில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், அதனை விற்பவர்கள் ஆகியோரை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைசெல்வன் உத்தரவின்படி, காவல் துறை துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் பெண் கைது:



இந்நிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதிகளவில் கஞ்சா வைத்து அதை சிறு வியாபாரிகளுக்கு வழங்கி வருவதாக வந்த தகவலையடுத்து, தொடர்ந்து தனிப்படையினர் அந்த பெண்ணை கடந்த 10 நாட்களாக கண்காணித்து வந்தனர்.  இந்நிலையில் இன்று காலை ஒசூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி அடுத்த பூசாரிபட்டி என்ற இடத்தில் பூங்கொடி(65) என்ற பெண், ஒரு பெரிய பண்டல்களுடன் நிற்பதை கண்டு அவரிடம் விசாரணை செய்தனர். அதனையடுத்து அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்ததில் அதில் 12 பண்டல்களில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் ஏற்கனவே பல முறை கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிலர் அதிகளவில் கஞ்சா வழங்கி வந்துள்ளதாகவும், அதை பிரித்து தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

25 கிலோ கஞ்சா பறிமுதல்:

 


 

இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் கூறும் போது மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கஞ்சா போன்ற போதை பொருட்களை அதிகளவில் விற்பளை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் கூறினார். அதனையடுத்து 65 வயதுடைய பெண்ணை கைது செய்துள்ளதாகவும், மாவட்டத்தில் 74 கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யபடுவார்கள் என்றும், தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தை போதை பொருட்கள் பயன்படுத்தாத மாவட்டமாக கொண்டு வர காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.