சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 397 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.


சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழக 23 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வருகை பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவிக்கு, துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார்.



இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது அவர் கூறியது, "பேசிய தரநிர்ணய அங்கீகாரர் கவுன்சில் 4 புள்ளிகளுக்கு 3.61 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவில் உள்ள 58 ஏ++ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், பெரியார் பல்கலைக்கழகம் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளது என பெருமிதம். 


அவரைத் தொடர்ந்து விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியது. "பின்தங்கிய மாணவர்கள் கல்விக்கு பெரியார் பல்கலைக்கழகம் பெரிதும் உறுதுணையாக உள்ளது. ஆராய்ச்சி மற்றும் பட்டம் மேற்படிப்புகளில் பெரியார் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கி வருகிறது. காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அறிவு மற்றும் ஆக்கத் திறன் மேம்பாட்டுக்கு தற்போதைய கல்வி முறை உந்து சக்தியாக உள்ளது. தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்தை புகுத்துவதிலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும் நமது கல்வி நிறுவனங்கள் தலையாய பங்களிப்பை ஆற்றி வருகின்றன. சமூக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன், புதிய சவால்களை எதிர்கொள்ளவும் ஆராய்ச்சி கல்வி உறுதுணை புரிந்து வருகிறது. குறிப்பாக பெண்களின் தலைமைத்துவ பண்பை அதிகரிப்பதுடன், அவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதிலும் பெரியார் பல்கலைக்கழகத்தின் பங்கு முக்கியமானது என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவியருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.


பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணாக்கர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணாக்கர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணாக்கர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணாக்கர்களும் பட்டங்களை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் கதிரவன், ஆட்சிக் குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவியர், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.