கிருஷ்ணகிரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஓசூர் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையோர  மரத்தின் மீது மோதிய விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 21 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

 

இன்று காலை அரசு பேருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஓசூரிலிருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பாலக்கோடு அடுத்த சூடப்பட்டி அருகே நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, ஓசூர் நோக்கி எதிரே அதிவேகத்தில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் கணேசன் பிரேக் போட்டுள்ளார். அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வந்ததால், பேருந்து பிரேக் நிற்காமல், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஆல மரத்தின் மீது மோதியது. 

 



 

இந்த விபத்தில் பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியது. இதில் முன்னோக்கி சென்று பயணிகள் கம்பிகளில் மோதிக் கொண்டனர். இதில் முனியம்மாள் ( 70), முத்து (47), மோகன் குமார் (55),  சித்ரா ( 23), சுகந்தன் (1), நாகராஜ் (35), அருள் (34), முரளி (19)  மேகநாதன் (16), பிரவின்குமார் (17), உள்ளிட்ட 3 பள்ளி மாணவர்கள் உட்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து ஏற்பட்டது பயணிகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள், ஓடி வந்து, பேருந்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து நடந்த பேருந்தில் இருந்தவர்களை மாற்று பேருந்து மூலம் தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

 




 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், மருத்துவர்கள் வினோத் ராஜ், சாலினி, செந்தில்குமார், மருந்தாளுநர் முத்துசாமி, செவிலியர்கள்  உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர். இதில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்து லாரி மீது மோதியிருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால், பேருந்து ஆல மரத்தில் மோதியதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக வசமாக உயிர் தப்பினர்.  பாலக்கோடு பகுதியில் அரசு பேருந்து  விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.