நாடு முழுவதும் 76 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு 75 ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக ஓராண்டாக கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு கலைஞர்கள் தங்களது பங்களிப்பாக அவர்களது தனித்திறமையை கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் சமையல் வல்லுனராக பணியாற்றி வருபவர் குமரேசன் கோகுலநாதன். இவர் சமையல் மீது உள்ள ஆர்வத்தை காட்டிலும் டைப் போகிராபி என்று சொல்லக்கூடிய எழுத்துக்களை கொண்டு ஓவியம் வரைவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். டைப்போகிராபியில் பல சாதனைகளை படைத்த இவர் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய 1947 சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயர்களைக் கொண்டு தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவப் படத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த ஓவியம் 1947 சதுர அங்குலம் கொண்ட கருப்பு நிறத் தாலில் 1946 இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரும், 1947 ஆவது சுதந்திர போராட்ட வீரராக மகாத்மா காந்தியின் உருவத்தைக் கொண்டு டைப் போகிராபி என்னும் முறையில் 75 நிமிடங்களில் வரைந்து சாதனை படைத்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஆண்டுதோறும் அப்துல் கலாமின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாட்களில் அவரது பெருமையை உணர்த்தும் விதமாக உலக சாதனை செய்து வருகிறார். மேலும், மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மறைவின்போது அவர் பாடிய பாடல்களின் முதல் வார்த்தைகளை கொண்டு டைப் போகிராபி முறையில் அவரது ஓவியத்தை வரைந்து உலக சாதனை புரிந்துள்ளார். இது மட்டுமின்றி 2019 ஆம் ஆண்டு 20 மணி நேரத்தில் 1012 வகையான ஐஸ்கிரீமை உருவாக்கி "Exclusive Books of Record" சாதனை படைத்துள்ளார். சமையல் கலை மற்றும் ஓவியக் கலைகளில் சிறந்த விளங்கும் குமரேசன் கோகுலநாதன் அசிஸ்ட் புக் ஆஃப் ரெகார்ட், கிங் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட், எக்ஸ்க்லூசிவ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகம் என மொத்தம் 21 உலக சாதனைகளை புரிந்துள்ளார்.
இதுகுறித்து குமரேசன் கோகுலநாதன் கூறுகையில், 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 1947 சதுர அங்குலம் கொண்ட கருப்பு நிறத் தாலில் 1946 இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரும், 1947 ஆவது சுதந்திர போராட்ட வீரராக மகாத்மா காந்தியின் உருவத்தைக் கொண்டு டைப் போகிராபி என்னும் முறையில் 75 நிமிடங்களில் வரைந்து சாதனை படைத்துள்ளேன். நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு சுதந்திரத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்தை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக சாதனையை நிகழ்த்தி உள்ளேன் என்று கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்