சட்டமன்ற தேர்தலில் பாமக அமைத்த கூட்டணி, புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக ஆட்சியின் செயல்பாடுகள், பாமக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதில்கள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஏபிபி நாடு தளத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாடினார்.



 


கேள்வி:- 25 நாள்கள் திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?


பதில்:- முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினின் செயல்பாடுகள், ஆய்வுக்கூட்டங்கள், அறிவுப்புகள் அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. பாமகவின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கிறார்கள். அதிகாரிகள் நியமனம் நம்பிக்கையைக் கொடுக்கிறது. முதல்வரின் செயலாளர்களாக அமர்த்தப்பட்டிருக்கும் அனைவருமே நேர்மைக்கு பெயர்பெற்றவர்கள். ஸ்டாலினுக்குப் பாராட்டுகள். அமைச்சரவையில், மா.சுப்ரமணியன் சுகாதாரத்துறைக்குப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சிதான், சிறப்பாக செயல்படக்கூடியவர்தான், ஆனாலும் சுகாதாரத்துறை என்பது ஒரு டெக்னிக்கல் துறை. அதற்கு மருத்துவர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். விரைவில் மா.சுப்ரமணியனும் அனைத்தையும் கற்றுக்கொள்வார். மொத்தத்தில் திமுக ஆட்சியின் ஓப்பனிங் சிறப்பாக இருக்கிறது. Its a Nice Beginning.


கேள்வி:- தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியை கொடுத்ததா?


பதில்:- இல்லை. கூடுதல் எண்ணிக்கையிலான தொகுதிகள் வசமாகியிருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஆனாலும் 10  ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கான எதிர்ப்பு அலையை நான் எங்கும் காணவில்லை., இருமுறை தொடர் ஆட்சிக்குப் பிறகு ஓரளவுக்கான வெற்றியை அதிமுக பெற்றிருப்பது மகிழ்ச்சிதான். வன்னியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்த ஒரே காரணத்துக்காகத்தான் மீண்டும் அதிமுகவோடு கூட்டணியே வைத்தோம். வன்னியர் இட ஒதுக்கீடால் தெற்கில் தோற்றோம் என்றெல்லாம் ஓபிஎஸ் உள்ளிட்டோரே பேசுகின்றனர். அது குறுகிய மனநிலை. ஓபிஎஸ்க்கு அரசியல் பலம் இல்லை, அதனால்தான் தெற்கு தமிழகத்தில் தோற்றோம். பல இடங்களில் அதிமுக வெற்றிக்கு பாமகதான் ஒரே காரணம். அதிமுக எம்.எல்.ஏ.க்களில் 47 % பேர் பாமகவால் வென்றவர்கள். 31 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பாமகவால் வென்றவர்கள். பாமக இல்லையெனில் இந்தக் கூட்டணியே இல்லை. பாமக இல்லையெனில்  20 தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வென்றிருக்கும். பாஜகவுடன் அமைத்த கூட்டணியும் சில இடங்களில் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த்தும் எங்கள் கூட்டணியில் இருந்திருக்க வேண்டும். இன்னும் பலமான அணியாக இருந்திருப்போம்


கேள்வி:- பாமகவின் பலம் இவ்வளவு இருக்கிறது எனத் தெரிந்தும் ஏன் எப்போதும் கூட்டணி சேர்ந்தே நிற்கிறீர்கள்?



பதில்:- இட ஒதுக்கீடு என்ற ஒரே காரணம்தான். நாங்கள் தனித்துப்போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். யாரோ முதல்வராக நான் ஏன் உழைக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். அன்புமணி ஆகிய நான் என்ற வார்த்தையை மீண்டும் கேட்பீர்கள். அடுத்த தேர்தலில் கேட்பீர்கள். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தை நான் மறக்கவில்லை, மறக்கவும் மாட்டேன். மீண்டும் ஒலிக்கும்.



கேள்வி:- விசிக 6 இல் போட்டியிட்டு 4 இல் வென்றிருக்கிறதே? விசிகவுடன் திருமாவளவனுடன் இணைந்து பணியாற்றுவீர்களா?


பதில்:- எங்களை விசிகவுடன் ஒப்பிடாதீர்கள். தேர்தல் முடிவுகளை வைத்து பலத்தை கணக்கிட முடியாது. நான் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டவன். கலைஞர் ஜெயலலிதாவையே எதிர்த்துப் போட்டியிட்டவன். அதனால் விசிகவுடன் ஒப்பிட வேண்டாம். எங்களை ஒப்பிட விரும்பினால் திமுகவுடன் ஒப்பிடுங்கள். திருமாவளவனுடன் விசிகவுடன் இணைந்து சமூகத்தில் பணியாற்ற தயாராக இருக்கிறேன். தேர்தல் என்பது இரண்டாம்பட்சம்தான். மக்கள் முன்னேற்றம்தான்  முதலில். சமூகத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். தாழ்த்தப்பட்டவர்கள், வன்னியர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சமூகத்தில் இருவருமே பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இந்த இரு சமூகமும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாங்கள் இணையாமல் இருப்பது திமுகவின் சதி. நாங்கள் இணைந்துவிட்டால் அவர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமல்லவா? அதனால்தான்.



கேள்வி:- காதலுக்கு எதிரானவரா அன்புமணி?


பதில்:- இல்லவே இல்லை. 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தனிநபர்கள் விரும்பும்போது காதலிக்கும்போது அவர்களை எதிர்க்க நாங்கள் யார்?, நான் நாடகக்காதலையே எதிர்த்தேன். ஆனால் அந்தச் சூழலும் இப்போது இல்லை. நாடகக்காதலையும் ஒழித்துவிட்டோம். இதுபோன்ற தவறான பிம்பத்தை திட்டமிட்டுக் கற்பிக்கின்றனர்.  சென்னையில் தனியார் பள்ளியில் ஒரு பெண்குழந்தையிடம் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். இதையெல்லாம் விட்டுவிடக்கூடாது. மிக அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். சுப்ரமணியன் சுவாமியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பேசினால் மன்னிக்க மாட்டேன்.


 


இதுபோன்ற பல விவகாரங்கள் குறித்து மனம்திறந்து அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார். முழு விவரங்களை தெரிந்துகொள்ள ஏபிபிநாடு வலைத்தளத்தில் வீடியோவாகவும் பார்க்கவும்