இந்தியாவின் முன்னணி ஊடக தொழிலதிபர்களில் ஒருவரான செருகூரி ராமோஜி ராவ் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாள்களாகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இதய கோளாறு மற்றும் சுவாச பிரச்னை காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார்.


ராமோஜி ராவ் மறைவு: மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி போக, ராமோஜி ராவ் இன்று உயிரிழந்தார். இவருக்கு வயது 87. உலகின் மிகப் பெரிய பிலிம் சிட்டியான ராமோஜி பிலிம் சிட்டி இவருக்கு சொந்தமானது. அதோடு, ஈநாடு நானிதழ், ஈடிவி தொலைக்காட்சி, ஈடிவி பாரத் டிஜிட்டல் செய்தி தளம், உஷா கிரண் மூவிஸ், மார்கதர்சி சிட் ஃபண்ட், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, ஹோட்டல் டால்பின் குரூப் ஆகியவற்றையும் நிர்வகித்து வந்தார்.


சினிமா உலகம் மட்டும் இன்றி ஊடக உலகத்திலும் ராமோஜி ராவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படப்பிடிப்பு தளத்தில் ராமோஜி ராவுக்கு நடிகர் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.


எக்ஸ் தளத்தில் இதுகுறித்து ராம் சரண் வெளியிட்டுள்ள பதிவில், "ஈநாடு மூலம் பிராந்திய ஊடகங்களின் வீச்சை மாற்றி அமைத்தவர் ராமோஜி ராவ். உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி ஃபிலிம் சிட்டி, உலகெங்கிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது.


திரைப்பிரபலங்கள் அஞ்சலி: ராமோஜி ராவின் அன்பான ஆளுமை, தெலுங்கு மக்களுக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என பதிவிட்டுள்ளார்.


 






கார்த்திக் சுப்பராஜ் கதைக்கு ஷங்கர் திரைக்கதை எழுதி, இயக்கி வரும் படம்தான் கேம் சேஞ்சர். ராம் சரண் , பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


இப்படத்தின் முதல் பாடலான ஜரகண்டி என்கிற பாடலை இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் வெளியிட்டார். அனந்த ஸ்ரீராம் ஜரகண்டி பாடலை எழுதியுள்ளார். பஞ்சாபி பாடகரான தலேர் மெஹந்தி மற்றும் சுனிதி செளஹன்  இந்தப் பாடலை இனைந்து பாடியுள்ளார்கள். பிரபு தேவா இந்தப் பாடலுக்கு நடனம் இயக்கியுள்ளார்.