தஞ்சாவூர்: தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை புதுஆற்று பாலத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை காயவைக்கும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் காய வைக்கப்படும் எள் செடிகள் நனைந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். 


அனைத்து வித மண்ணிலும் விளைச்சல் தரும் எள்


காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கோடை சாகுபடி நடப்பதும் வழக்கம். இதேபோல் உளுந்து, பயறு, எள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எள் எல்லாவித மண்ணிலும் விளைச்சல் தரவல்லது. தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் எள் சாகுபடி செய்ய முடியும். எள்  பேக்கரி பொருட்கள் தயாரிப்பில் வாசனை மற்றும் அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைத்தால் ஒரு கிலோ விதை போதுமானதாக இருக்கும். 


மல்லுக்கட்டும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் எள்


சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் வாழ்க்கையோட மல்லுக்கட்டுற விவசாயிகளுக்கு அப்பப்ப ஒத்தாசையா இருக்கிறதே எள்தான். எதுவுமே விதைக்க முடியாத காட்டுலகூட எள்ளைப் போட்டா நாலு காசு கிடைக்குங்கிறதாலதான் ஏழை விவசாயிகளின் நண்பனாக இருக்கிறது எள். எண்ணெய், கால்நடைக்கு புண்ணாக்கு, நிலத்துக்கு உரம்னு பலவகையில பயன்படுது எள். வேலையாள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறைனு பல விஷயங்களைச் சமாளிக்க முடியாம திண்டாடுறவங்களுக்கு அருமையானத் தீர்வு இந்த எள்தான். 




இரண்டு உழவு உழ வேண்டும்


எள் விதைக்க வடிகால் வசதியோடு இருக்கும் எல்லா மண் வகைகளும் ஏற்றது. எள்ளின் வயது 90 நாள். பெரும்பாலும் ஒரு போகம் நெல் விவசாயம் முடிந்ததும், அடுத்து ஒரு போகம் இறவையில் எள் விதைக்கலாம். எள்ளுக்கு பல பட்டம் இருந்தாலும், மாசிப் பட்டத்தில் விதைப்பது சிறந்தது. நிலத்தில் இரண்டு உழவு போட்டு தண்ணீர் கட்டி, புட்டு பதத்துக்கு மண்ணை மாற்றிவிட்டு, விதையைத் தூவி, மறுபடியும் இரண்டு உழவு போடவேண்டும். இதுபோல விதைக்கும்போது 60% அளவுக்கு களைகள் கட்டுப்படும். எள்ளில் ஏகப்பட்ட ரகங்கள் இருக்கின்றன. நாட்டுரகமான கருப்பு எள்தான் சிறந்த ரகம். மானாவாரி என்றால், ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை தேவைப்படும். இறவை என்றால் ஒரு ஏக்கருக்கு மூணு கிலோ விதை தேவைப்படும். இதனால்தான் விவசாயிகள் எள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


வண்ணாரப்பேட்டை பகுதியில் எள் சாகுபடி


அந்த வகையில் தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் கோடையில் எள் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை செய்யப்பட்ட எள் செடிகளை விவசாயிகள் சாலையில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கோடைகாலம் முடிந்துள்ள நிலையில் தற்போது வெயில் அதிகம் இல்லை.  மானாவாரி நிலங்களில் மட்டுமே எள் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பம்ப்செட் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் எள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.


நெல்லுக்கு மாற்றுப்பயிராக எள் சாகுபடி


நெல்லுக்கு மாற்றுப் பயிராக எள் சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஈடுபட தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் செல்லப்பன்பேட்டை, முன்னையம்பட்டி, வண்ணாரப்பேட்டை, ஆலக்குடி என்று பல பகுதிகளில் விவசாயிகள் எள் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அந்த எள் செடிகள் அறுவடை செய்யப்பட்டு காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


காய்ந்த எள் மீண்டும் நனைவதால் விவசாயிகள் கவலை


தற்போது விட்டு விட்டு மழை பெய்வதால் விவசாயிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இதனால் காய்ந்த எள் செடிகள் மீண்டும் நனைந்து விட்டது. இதனால் எப்போது வெயில் அடிக்கும் மீண்டும் காய வைப்பது என்ற வேததனையில் விவசாயிகள் உள்ளனர். காய்வதும், நனைவதும், மீண்டும் காய வைப்பது என்று விவசாயிகள் உள்ளனர். தற்போது தஞ்சை மார்க்கெட்டில் எள் கிலோ ரூ.140 விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து கொள்கின்றனர். சில விவசாயிகள் எள் சாகுபடி செய்த போதே பல்வேறு எண்ணெய் செக்கு வைத்துள்ளவர்களிடம் எள்ளை நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.