13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் (டீன்) பணியிடங்கள் பல மாதங்களாகக் காலியாக இருப்பதாகவும் மருத்துவக் கல்வியை திமுக அரசு வளர்க்கும் அழகு இதுதானா எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகள்:


’’தமிழ்நாட்டில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, சேலம், தேனி உள்ளிட்ட 13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் (Dean) பணியிடங்கள், அதிகபட்சமாக 4 மாதங்களாக காலியாக உள்ளன. மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில், மருத்துவக் கல்லூரி முதன்மையர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.


முக்கியமான டீன் பணியிடம்


மருத்துவக் கல்வி கட்டமைப்பில் மருத்துவக் கல்லூரிக்கான முதன்மையர் பணியிடம் மிகவும் முக்கியமானது ஆகும். அந்தப் பணியிடம் ஒரு நாள் கூட காலியாக இருக்கக் கூடாது. ஒரு மருத்துவக் கல்லூரியின் முதன்மையர் எந்த தேதியில் ஓய்வு பெறப் போகிறார் என்பது அந்தப் பணியில் அவர் நியமிக்கப்பட்ட நாளிலேயே தெரிந்து விடும். அவ்வாறு இருக்கும்போது, முதன்மையர் பணிகளை குறித்த காலத்தில் நிரப்பாமல் வைத்திருப்பதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை.

மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவை இயக்ககம் ஆகியவற்றில் உள்ள அனைத்து நிலை உயர் பதவிகளுக்குமான பதவி உயர்வுக்கான ஏற்பாடுகள் மார்ச் 15-ஆம் தேதியை தகுதி காணும் நாளாகக் கொண்டு தொடங்கப்பட வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பெரும்பாலான காலங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை.  


நடப்பாண்டில் முதன்மையர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியான மூவரின் பெயர்களை தேர்வு செய்யப்பட்டு மருத்துவத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்யாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதற்கான காரணம் புரியவில்லை.


அரசின் அலட்சியத்தைத் தவிர வேறு என்ன காரணம்?


தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பணியிடங்கள் ஆளுனருக்கும், அரசுக்கும் இடையிலான மோதல் காரணமான பல மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளன. ஆனால், மருத்துவக் கல்லூரி முதன்மையர் பணியிடங்களை நிரப்புவதில் அத்தகைய முட்டுக்கட்டைகள் எதுவும் இல்லை. மருத்துவக் கல்லூரி முதன்மையர் பதவிகள் நிரப்பப்படாததற்கு அரசின் அலட்சியத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.

மருத்துவக் கல்வியை வளர்த்தெடுப்பதில் முதன்மையர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய பதவிகளை காலியாக வைத்திருப்பது நியாயமல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதன்மையர்களை உடனடியாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.