1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்ற இந்திய வீரர் பைரோன் சிங் ரத்தோர் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய மக்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். 


1971 ஆம் ஆண்டு தார் பாலைவனத்தில் உள்ள லோங்கேவாலா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 14வது எல்லைப் பாதுகாப்பு படையில் 6 முதல் 7 வீரர்கள் கொண்ட குழுவுக்கு தலைமை வகித்த பைரோன் சிங் ரத்தோர், உள்ளூர்காரராக இருந்ததால்  23 பஞ்சாப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டு முக்கிய தகவல்களை வழங்கினார். மேலும் போரின் போது ​​இலகுரக இயந்திர துப்பாக்கியால் சுட்டு பாகிஸ்தான் படைக்கு பலத்த சேதங்களை பைரோன் சிங் ரத்தோர்  ஏற்படுத்தியிருந்தார்.






அவரது வீரதீர செயலுக்காக 1972 ஆம் ஆண்டில் சேனா பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனையடுத்து 1987 ஆம் ஆண்டு நாயக் ஆக இருந்து பணியில் இருந்து பைரோன் சிங் ரத்தோர்  ஓய்வுப் பெற்றார். 1997 ஆம் ஆண்டு வெளியான 'பார்டர்' திரைப்படத்தில் பைரோன் சிங் ரத்தோரின் துணிச்சலைப் பற்றி நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்திருந்தார். இதன்மூலம் அவரது புகழ் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்ந்தது. 


இதனிடையே ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தில் தினமும் அதிகாலை 5 மணிக்கு முன் எழுந்து யோகா செய்து,  அருகிலுள்ள சோலங்கியதாலா மைதானத்திற்குச் சென்று, ராணுவத்திற்காக பயிற்சி பெறும் வீரர்களிடம் உரையாடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் ஜோத்பூர் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பைரோன் சிங் ரத்தோர்  , 81 வயதான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 






அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இயக்குநர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாயக் (ஓய்வு பெற்ற) பைரோன் சிங் ஜி நம் தேசத்திற்கு அவர் செய்த சேவைக்காக நினைவுகூரப்படுவார். நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர் மிகுந்த தைரியத்தைக் காட்டினார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 






இதேபோல் கடந்த ஆண்டு ஜெய்சால்மரில் தங்கியிருந்தபோது பைரோன் சிங் ரத்தோரை சந்தித்தேன். தாய்நாட்டின் மீது அவருக்கு  இருந்த அன்பு மற்றும் தேசபக்தி உண்மையிலேயே தனித்துவமானது. அவரது வீர வரலாறு வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.