ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா கடந்த ஜூலை மாதம் தெலங்கானாவில் தனிக்கட்சி தொடங்கியிருந்த நிலையில், அவர் தற்போது தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது சகோதரருடன் கொள்கை முரண்பாடு காரணமாக தனிக்கட்சி தொடங்கிய ஷர்மிளா, விரைவில் பிரசாந்த் கிஷோருடன் அதிகாரப்பூர்வமாக இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், பிரசாந்த் கிஷோர் அவருக்கு ஒரு சகோதரரைப் போல உதவ உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


கடந்த 2018ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரும், அவரது ஐபேக் நிறுவனமும் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்காகப் பணியாற்றினர். தொடர் பிரசாரம், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் முதலான ஐடியாக்களுடன் இறங்கிய பிரசாந்த் கிஷோரின் டீம் ஜெகன் மோகனின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். 



ஒய்.எஸ்.ஷர்மிளா


 


தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான `பிரஜா சங்கல்பா யாத்ரா’ என்றழைக்கப்பட்ட 3648 கிலோமீட்டர் மாநிலம் தழுவிய நடைபயணத்தை நடத்துவதிலும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமின் பங்கு முக்கியமானது. சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சியைப் படுதோல்வி அடையச் செய்து, அதிக உறுப்பினர் வித்தியாசத்தில் ஆட்சியை அமைத்தது ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி. 


கடந்த மே மாதம், மேற்கு வங்காளத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்த பிரசாந்த் கிஷோர், தேர்தல் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்திற்கு வெளியில், பிற மாநிலங்களில் வளர்வதற்கு ஆலோசனை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில் தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரில் கடந்த ஜூலை மாதம் `ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கிய ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா நேர்காணல் ஒன்றில், `விரைவில் பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றவுள்ளோம். இன்னும் அவருக்கான பணிகள் எதையும் ஒதுக்கவில்லை எனினும் அவர் ஒரு சகோதரராக என்னுடன் நிற்பதாகவும், உதவி செய்தாகவும் உறுதியளித்துள்ளார். அதனால் விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்க இருக்கிறோம்’ என்று அவர் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோருடன் பணியாற்ற விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் தெரிவித்துள்ளார். 



ஒய்.எஸ்.ஷர்மிளா - ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி


 


எனினும் அவர் பிரசாந்த் கிஷோருடன் இதுகுறித்து அலுவல்ரீதியான சந்திப்பில் இன்னும் ஈடுபடவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தரப்பில் விளக்கம் கோரப்பட்ட நிலையில், எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. 


மேலும் ஒய்.எஸ்.ஷர்மிளா தனது அண்ணன் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியுடன் கருத்தியல் முரண்பாடு மட்டுமே இருப்பதாகவும், அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்ற தகவல்கள் பொய்யானவை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.