2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. அவை என்னென்ன? பார்க்கலாம்.
கட்சி தொடங்கிய நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், இதே ஆண்டில்தான் கட்சி தொடங்கி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆனார். தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டது. 2009-லேயே விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், கட்சி இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரு ஆளுமைகளும் காலமான நிலையில், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு வெற்றிடம் உருவானதாக அனைவரும் கூறிவந்தனர். இந்த சூழலில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்துள்ளார். குறிப்பாக திமுகவுக்கு எதிராக தவெக தொண்டர்கள் தொடர்ந்து களமாடி வருகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை முதல்வர் ஆன உதயநிதி
திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், 1983-ல் அரசியலுக்கு வந்தார். சரியாக 26 ஆண்டுகள் கழித்து துணை முதல்வர் ஆகப் பொறுப்பேற்றார். அதே நேரத்தில் அவரின் மகனான உதயநிதி ஸ்டாலின், 2019-ல் கட்சி அரசியலுக்குள் வந்தார். 5 ஆண்டுகளில் அவருக்கு துணை முதல்வர் பதவி இதே 2024-ல் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் தற்போது துணை முதல்வராக அவர் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். இதில் திமுக பெறும் வாக்குகள், உதயநிதியின் அரசியல் வாழ்வுடைய போக்கைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நேர கூட்டணி அரசியல்
நாட்டின் 18ஆவது மக்களவைக்கான தேர்தல் இந்த ஆண்டுதான் நடைபெற்றது. இதில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக ஏற்கெனவே அறிவித்து இருந்த நிலையில், கூட்டணி அறிவிப்புக்குக் கொஞ்ச நாள் முன்பு வரை அதிமுகவுடன் பாமக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
எனினும் யாரும் எதிர்பாராதவிதமாக, பாமக திடீரென பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அதேபோல தேமுதிக அதிமுகவுடன் இணைந்து களம் கண்டது. கமலின் மக்கள் நீதி மய்யமும் திமுகவுடன் கைகோத்தது. இவை அனைத்தும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.
தகிக்கும் தலித் அரசியல்!
பகுஜன் சமாஜன் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில், லாட்டரி அதிபரின் மருமகனும் தேர்தல் வியூக வகுப்பாளருமான ஆதவ் அர்ஜூனா இணைந்தார். கட்சியில், இணைந்து கொஞ்ச நாட்களிலேயே, அவருக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ’’விசிக அதிகாரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆட்சியில் பங்குகொடுக்க வேண்டும்’’ என்ற ஆதவின் பேச்சுகள், திமுக – விசிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தின. இறுதியாக அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவில், ஆதவ் அர்ஜூனா திமுக குறித்துப் பேசியது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஆதவ் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது ஆதவ் அர்ஜூனாவே விசிகவில் இருந்து வெளியேறிவிட்டார். இவர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
காலியாகும் நாதக கூடாரம்
கட்சி தொடங்கிய நாளில் இருந்தே, நாம் தமிழர் கட்சி தனித்தே தேர்தலில் களம் கண்டு வருகிறது. பெண்களுக்கு சம ஒதுக்கீடு வழங்கீடு வழங்கி வருகிறது. நாம் தமிழர் பேசும் அரசியலில் பலருக்கும் பலவித கருத்துகள் இருந்தாலும் மேலே சொன்ன இரண்டும், அவர்களைத் தனித்துக் காண்பிக்கிறது.
இந்த நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னிச்சையாக, சர்வாதிகாரத்துடன் நடந்துகொள்கிறார் என்று புகார் எழுந்தது. 'சீமானைச் சந்திக்கவே முடிவதில்லை, நிர்வாகிகளின் குடும்ப நிகழ்வில் அவர் கலந்துகொள்வதே இல்லை' என்பன உள்ளிட்ட குரல்களும் அதிகமாகின. இதற்கிடையே பெரும்பாலான மாவட்டங்களில் நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து வருகின்றனர். இது அக்கட்சியின் தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.