INDIA Bloc: காங்கிரஸ் கட்சி ஈவிஎம் இயந்திரங்களை குறை கூறுவதை விட்டுவிட்டு, தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


காங்கிரஸை விமர்சித்த ஒமர் அப்துல்லா


ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா,  INDI.,  கூட்டணிக் கட்சியான காங்கிரஸின், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளை விமர்சித்துள்ளார். தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் காரணங்களை முன்வைப்பதை நிறுத்திவிட்டு, தேர்தல் முடிவுகளை ஏற்க வேண்டும் என்றும், வாக்குப்பதிவு முறையை நம்பவில்லை என்றால் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக பேசிய அவர், “அதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று, அதை உங்கள் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று நீங்கள் கொண்டாடிவிட்டு, தற்போது தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையவில்லை என்பதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என அப்துல்லா விமர்சித்துள்ளார்.



பாஜகவின் கருத்தா?


பாஜகவின் கருத்துகளை போன்றே பேசுகிறீர்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ”இல்லை, எது சரியோ அதையே கூறுகிறேன்” என பதிலளித்தார். மேலும், “தனது கருத்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது, கட்சி விசுவாசத்திற்கானது அல்ல” என கூறினார். அப்துல்லாவின் கருத்துக்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, அவரது தேசிய மாநாட்டு கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையை வெளிக்காட்டியுள்ளது.


தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் போதுமான தீவிர களப்பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், பெரும்பாலான வேலைகளை தங்களது கட்சிக்கே விட்டுவிட்டதாகவும் NC தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருந்த போதிலும், தேர்தல் முடிவில் அப்துல்லாவின் கட்சி 42 இடங்களை வென்றது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸ் 6 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.


கலங்கும் காங்கிரஸ்


நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களில், காங்கிரஸ் உள்ளடங்கிய இந்தியா கூட்டணி தோல்வி முகத்திலேயே உள்ளது. இதன் விளைவாகவே எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்க நான் தயார் என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார். இதற்கு சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. இதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸின் நிலைமை கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும், அக்கட்சி சுயபரிசோதனை செய்துகொண்டு, தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் தான், வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என, மற்றொரு கூட்டணி கட்சியான தேசிய மாநாடு விமர்சித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்குமா அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.