எனது வெற்றிப்பாதையை காங்கிரஸ் குலைத்துள்ளது. இனிமேல் காங்கிரஸ் கட்சியுடன் வேலை பார்க்கமாட்டேன் என்று பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.


காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்:


பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை 2024ல் வரவிருக்கும் தேர்தலுக்காக ஆலோசகராக நியமிக்க முடிவு செய்திருந்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியில் செய்யவேண்டிய மாற்றங்கள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து சுமார் 600 பக்க அறிக்கையை காங்கிரஸ் 2.0 என்ற தலைப்பில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையிடம் கொடுத்திருந்தார். சுமார் 3க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் இடையே நடைபெற்றது. பிரசாந்த் கிஷோர் தேர்தல் ஆலோசகராக இருப்பதற்கு பதிலாக காங்கிரஸில் ஒரு நிர்வாகியாக இருக்க வேண்டும் என்று விரும்பியது.


இதனை பிரசாந்த் கிஷோர் ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் அவர் காங்கிரஸில் இணைவார் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதற்கிடையில் தெலங்கானா மாநில சட்டமன்றத்தேர்தலுக்கு டிஆர்எஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமிட காங்கிரஸ் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால், காங்கிரஸில் இணையும் முடிவை கைவிட்ட பிரசாந்த் கிஷோர், 2024 தேர்தலுக்கான ஆலோசகர் பொறுப்பிலிருந்தும் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது.




பாதயாத்திரையைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர்:


பின்னர் தனிக்கட்சி ஒன்றை பிரசாந்த் கிஷோர் ஆரம்பிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பீகார் முழுவதும் நடைபயணம் செய்யவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் ஜன் சூரஜ் யாத்திரையை கடந்த மே 30 தேதி பீகார் மாநிலம் வைஷாலியில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் ரகுவன்ஷ் ப்ரசாந்த் சிங்கிற்கு மரியாதை செலுத்திய பின்னர் தொடங்கினார்.


அப்போது பேசிய அவர் தான் பல்வேறு கட்சிகளுடன் வேலைபார்த்திருப்பதாகவும் தான் தோல்வியடைந்தது காங்கிரஸ் கட்சியால் தான் என்றும் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் 11 தேர்தல்களில் வேலை பார்த்திருப்பதாகக் குறிப்பிட்ட ப்ரஷாந்த் கிஷோர் அதில் 2017 உத்தரபிரதேசத் தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்ததாகவும், அது தனது ட்ராக் ரெக்கார்டை சிதைத்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.




ட்ராக் ரெக்கார்டை சிதைத்த காங்கிரஸ்:


2015ல் பீகார் தேர்தல், 2017ல் பஞ்சாப் தேர்தல், 2019ல் ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றி, 2020 டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலின் வெற்றி 2021ல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் வெற்றி மற்றும் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் வெற்றிக்காக உழைத்திருக்கிறேன். ஆனால் தோல்வியடைந்தது என்றால் அது 2017ல் நடைபெற்ற உத்தரப்பிரதேசத் தேர்தலில் தான். காங்கிரசுக்காக வேலை பார்த்து தோல்வியடைந்தது எனது வெற்றிப்பாதையை குலைத்துவிட்டது என்று கூறினார்.






”காங்கிரஸ் மூழ்கிக்கொண்டிருக்கிறது”:


எனவே இனிமேல் காங்கிரஸுடன் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், முன்னேற்றமே இல்லாத கட்சி காங்கிரஸ். நான் அந்த கட்சியை மதிக்கிறேன். ஆனால் தற்போதைய நிலையில் அந்த கட்சியால் மீள முடியாது. அந்த கட்சி தற்போது மூழ்கிக்கொண்டிருக்கிறது. அது நம்மையும் சேர்த்து மூழ்கடித்துவிடும் என்று கூறியுள்ளார்.