இந்திய துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மாநிலங்களவையில் ஜெயா பச்சன் உள்ளிட்டோரின் பேச்சுக்களையும் அவர்களின் உடல்மொழியையையும் கண்டித்து கடுமையான முறையில் நடந்துகொண்டு, அவையை கண்ணியமாக நடத்த காரணமாக இருந்தவராக அறியப்படும் ஜக்தீப் ஏன் திடீரென ராஜினமா செய்தார் என்ற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன் வைத்திருந்தன. வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜக்தீப் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டாலும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலில்தான் அவரை பாஜக ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுத்ததாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. ஒரு கட்டத்தில் ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை,  அவர் வீட்டுக் காவலில் இருக்கிறாரா? என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன.

புதிய துணை ஜனாதிபதியை நியமிக்கும் நடைமுறை தொடக்கம்

இந்நிலையில், புதிய துணை ஜனாதிபதியை நியமிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. வரும் செப்டெம்பர் 9ல் தேர்தல் நடத்தப்பட்டு, அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 21ஆம் தேதி கடைசி நாள். அதாவது வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் மூன்று தினங்களே உள்ளன. இப்படியான சூழலில் டெல்லியில் நடைபெற்ற மோடி தலைமையிலான பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் மஹாராஸ்ட்ரா மாநிலத்தின் ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனை போட்டியின்றி தேர்வு செய்ய எதிர்க்கட்சிகளிடம் பேசுவோம் எனவும் பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.

திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எடுக்கப்போகும் முடிவு என்ன ?

இப்படியான சூழலில், மீண்டும் ஒரு தமிழருக்கு இந்தியாவின் மிக முக்கிய பதவிகளுள் ஒன்றான துணைக் குடியரசுத் தலைவருக்கான வாய்ப்பை பாஜக அளித்துள்ளது.  பொது வேட்பாளரை நிறுத்த இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே முயற்சித்து வரும் நிலையில், தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக் அறிவித்துள்ளது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற பாஜக தலைவர்களைபோல் இல்லாமல் தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அனைத்து கட்சி தலைவர்களுடன் நல்ல நட்புடன் பழகுவர் என்ற தனித்த அடையாளம் அவருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல உறவில் அவர் இருக்கிறார். சமீபத்தில் கூட முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், அவரது இல்லத்திற்கே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன.

இந்நிலையில், அரசியல் காரணங்களை தள்ளி வைத்துவிட்டு, இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் கூறத் தொடங்கியிருக்கின்றார்கள்.  இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியுள்ளது.