ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.



சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் புதிதாக துவக்கப்பட்ட டீ கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். சேலம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியை சார்ந்த சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மற்றும் கிரிஜா குமரேசனை வாழ்த்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.


தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சேலம் மாநகராட்சி துணை மேயர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி கூட்டணி தர்மத்தை ஏற்று அவர் துணை மேயர் பதவி வழங்கியிருப்பது பாராட்டிற்குரியது. கடந்த 9 மாத காலம் மிக சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். கடுமையாக உழைத்து வருகிறார். உலக அளவில் மிக சிறந்த அரசியல்வாதியாக திகழ்கிறார். தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளார். மீதி இருக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் அவர் நிறைவேற்றுவார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுபோல குடும்பத் தலைவியின் பெயரில் வீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



 தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக வர எனது வாழ்த்துக்களை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாது அணை பிரச்சினையில் 100 சதவிகிதம் எங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பிரச்சினையில் முதலமைச்சர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவினர் போட்டியிட்டு இருந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரே ஒரு அறிக்கை வெளியிட்டார். இப்போது போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


தமிழக பட்ஜெட் மக்களுக்குரிய பட்ஜெட்டாக இருக்கும். பாலியல் வழக்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாதது ஏன் என தெரியவில்லை. ஜெயலலிதா இறந்தது எப்படி என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.