அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். 


அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு மேல் வழக்கு தொடுத்த நிலையில் தீர்ப்புகள் சாதகமாக அமையவில்லை. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 


இந்நிலையில் இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேசமயம் இதுவரை எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்த தேர்தல் ஆணையம் தற்போது அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் கட்சி மற்றும் சின்னம் ஆகிய இரண்டுமே, இபிஎஸ் வசம் ஆகியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளார். அதேநேரம், இந்த முடிவானது நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றுள்ளனர். 


செங்கோட்டையன்


தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு தர்மம் வென்றிருக்கிறது என்ற வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சீரோடும், சிறப்போடும் இந்த இயக்கத்தை வலிமையோடு நடத்துவோம் என்ற மகிழ்ச்சியை இந்த தீர்ப்பு தருகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற வரலாற்றை தமிழ்நாட்டில் படைப்போம். அதன்பிறகு 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைவதற்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்த தீர்ப்பை வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 


பொள்ளாச்சி ஜெயராமன்


கழகத்தின் பெயர்,கட்சி, இரட்டை இலை சின்னத்தை இனிமேல் யாரும் உரிமை கோர முடியாது.  ஒன்றரை கோடி தொண்டர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் வரவேற்கக்கூடிய இந்த முடிவை கிடைத்துள்ளது. இதுவரை இருந்த அனைத்து போராட்டமும் முடிந்து விட்டது. இனிமேல் அதிமுகவுக்கு ஏறுமுகம் தான். வெற்றி மேல் வெற்றிகள் எடப்பாடி பழனிசாமிக்கு குவியும். ஓபிஎஸ் அதிமுக பெயரை பயன்படுத்தினால் சட்டபடி வழக்கு தொடருவோம்.


அப்போது ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடியை காரில் கட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இன்னைக்கு வரைக்கும் வேற. நாளைக்கு கட்டிக்கொண்டு வருகிறார்களா என்பதை பார்க்கலாம். 


எஸ்.பி.வேலுமணி


இன்றைக்கு அற்புதமான, நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கழகத்தை கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி பின்னால் தான் ஒன்றரை கோடி தொண்டர்களும் நிற்கின்றனர். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளிலும் அவர் வெல்வார்