நீதிமன்றங்கள் தானாக முன் வந்து வழக்குகளை எடுத்து விசாரிப்பது அரிது. அதிலும் தனிப்பட்ட நபர்கள் தொடர்புடைய வழக்குகளை இப்படியெல்லாம் எடுப்பது அரிதிலும் அரிது. வழக்கமாக பொதுநல வழக்குகள், ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்படும், விவாதிக்கப்படும் சம்பவங்களைதான் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக, சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட திமுக அமைச்சர்களின் வழக்குகளை தானாக முன் வந்து விசாரிக்கத் தொடங்கி, அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
பொன்முடி, கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு என அவர் எடுக்கும் அடுத்தடுத்த வழக்குகளால் அதிர்ந்து போயிருக்கிறது அறிவாலய வட்டாரம். இப்படி அரசியல் வழக்குகளை அநாயாசமா எடுத்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் யார் ? அவர் தனது முந்தைய வழக்குகளை எல்லாம் எப்படி கையாண்டு இருக்கிறார் என்று வரலாறுகளை புரட்டி பார்த்தால் ஆச்சரியங்கள் தொற்றிக்கொள்ளும்.
பெரம்பூரில் பிறப்பு, சென்னையில் படிப்பு
1969ல் சென்னை அருகே இருக்கக் கூடிய பெரம்பூரில் பிறந்த் ஆனந்த் வெங்கடேஷ், மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் படித்தார். பின்னர், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற கையோடு, 15.10.1993ல் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துக்கொள்கிறார். மூத்த வழக்கறிஞராக இருந்த ராமமூர்த்தியிடம் ஜுனியராக 4 வருடம் பணிபுரிந்த பிறகு, பின்னர் தானாக வழக்குகளை கவனிக்கத் தொடங்கி, சிவில், கிரிமினல் என எல்லா விதமான பிரிவுகளிலும் வழக்குகளை எடுத்து வாதாடி அனுபவம் பெறுகிறார். 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி, 2020ல் நிரந்தர நீதிபதியான பின் அவர் விசாரித்த வழக்குகளில் எல்லாம் சட்டத்தோடு சேர்த்து சமுதாய உணர்வுகளையும் புரிந்து, அதற்கு ஏற்படி உத்தரவு வழங்குவதாக அவருடன் பழகியவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கவனம் பெற்ற தன் பாலின ஈர்ப்பு வழக்கு
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அதாவது 2021ல் தன் பாலின ஈர்ப்பு தொடர்பான ஒரு வழக்கில் அவர் அளித்த உத்தரவு பலரது கவனத்தை பெற்றதோடு, பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பரஸ்பரம் ஈர்ப்பு ஏற்பட்ட பெண்கள் இருவர், தங்களுக்கு பாதுகாப்பு கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் 107 பக்கத்திற்கு அவர் அளித்த தீர்ப்பு பிரம்மிக்க வைப்பதாக இருக்கிறது.
இதுதான் சரி என்று கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் புழங்கும் ஒரு சாதாரண மனிதனாக இருந்து இந்த வழக்கில் உள்ள நுட்பத்தையும் உணர்வுகளையும் தன்னால் புரிந்துகொள்ள முடியாது என்று எண்ணி, மனநல ஆலோசகர், உடல் உறுப்புகளின் உணர்வுகள் குறித்து மருத்துவர் என பல்வேறு தரப்பினருடன் கலந்து உரையாடி அவர் அந்த தீர்ப்பை அளித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, அந்த இரண்டு பெண்களின் பெற்றோர்களை அழைத்து பேசி, அவர்கள் இந்த சமூகத்தில் இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதையெல்லாம் உணர்ந்து, தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு இந்த சமூகத்தில் பாதுகாப்பு வேண்டும் என்றால், அதற்கு முதலில் சட்ட பாதுகாப்பு தர வேண்டும் என்று அந்த வழக்கில் தீர்ப்பு அளித்ததோடு இல்லாமல், கீதை, மகாபாரதம் உள்ளிட்ட இந்த இறை நூல்களிலும் தன்பால் ஈர்ப்பு தவறு என்று சொல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
’தானாக முன்வருவது நீதிபதிக்கு புதிதல்ல’
அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன் வந்து விசாரிப்பதால், இப்போது அவர் பெயர் பரபரப்பாக பேசப்படுகிறது, பகிரப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னரே பல பொதுநல வழக்குகளையும் பெண் உரிமை சார்ந்த வழக்குகளையும் அவர் தானாக முன் வந்து எடுத்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். காவல் துறையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த செய்தியை அறிந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அந்த வழக்கை தானாக முன் வந்து எடுத்து விசாரித்ததோடு, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலையா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதேபோல, டாஸ்மாக் மதுபான கடையை பெண்கள் சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் அனைவரையும் விடுவித்ததோடு, வருமானத்திற்காக மதுபானம் விற்கும் கொள்கை முடிவை அரசு எடுத்தால், அதனை எதிர்க்க மக்களுக்கு உரிமையுண்டு என்று தனது உத்தரவில் அவர் தெரிவித்த கருத்துகள் வரவேற்பை பெற்றன.
‘பணம் சம்பாரிப்பது மட்டுமே பணி அல்ல – வைரலான பேச்சு’
சில ஆண்டுகளுக்கு முன் மதுரை பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்று பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கறிஞர்கள் ஒன்றும் ஈட்டி காரர்கள் அல்ல, அவர்கள்தான் அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பார்கள். நாம் அப்படி இருக்க கூடாது என்று பேசியது வைரல் ஆனது. பணம் சம்பாரிப்பது மட்டுமே வழக்கறிஞர் பணியாக இருக்கக் கூடாது என்றும், திருவள்ளூவர், கம்பர் சொல் வழி வாழ வேண்டும் எனவும் அவர் பேசியது பலரது பாராட்டையும் பெற்றது.
குறுக்கு வழியில் வாழ நினைத்த எவரும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என்று அவர் உணர்ச்சிப்பொங்க அந்த நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார்.
வழக்குகளை கடந்து சமூக பணிகளில் ஆர்வம் காட்டும் நீதிபதி
தன்னிடம் வரும் வழக்குகளில் மட்டும் உத்தரவை பிறப்பிக்கும் நீதிபதியாக இருக்காமல், சமூகத்தில் மாற்றம், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று நினைக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழிலும் சரளமாக பேசும் திறன் பெற்றவர். நீதிமன்ற பணிகள் போக, மீதமிருக்கும் நேரத்தில் புத்தகங்கள் படிப்பது, சொற்பொழிவுகள் ஆற்றுவது, ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு சட்ட நுணுக்கங்களை சொல்லித் தருவது என தன்னுடைய நேரத்தை அவர் ஆக்கப்பூர்வமான பணிகளில் செலவிட்டு வருகிறார்.
கிரிக்கெட்டில் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’
அதோடு, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக விளக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி இருக்கிறார். குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு அரைசதம் அடித்து ‘மேன் ஆஃப் தி மேட்ஜ்’ பட்டத்தையும் பெற்றார்.
அரசியல்வாதிகளுக்கு சிக்கல் ?
தவறான வழியில் பணம் சம்பாரிக்க கூடாது, மக்களை ஏமாற்ற கூடாது, அறத்தோடு வாழ வேண்டும் என்று மேடைகளிலும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பேசி வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போலியான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை விடக்கூடாது என்ற மன நிலையில் உள்ளவர் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால்தான், சரியாக விசாரிக்கப்படாமல் முடிக்கப்பட்ட அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்குகளை அவர் இப்போது தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் என்றும், இது போன்று கீழமை நீதிமன்றங்களால் முடிக்கப்பட்டு, மேல்முறையீடு செய்யாத அரசியல் தொடர்புடைய இன்னும் பல வழக்குகளையும் அவர் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அரசியல்வாதிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது