தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு திமுகவினர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஒன்றிய அரசு என மத்திய அரசை கூறி வருவது, பாஜகவினரை எரிச்சலாக்கியுள்ளது. அதேபோல், தமிழகம் அல்ல தமிழ்நாடு என்று சொன்னால், இந்தியாவை நாங்கள் பாரதநாடு என்று சொல்வோம் என குஷ்பு போன்ற பாஜகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மத்தியில் ஆளும் பாஜக அரசை நேர்மறையாக தீண்டும் விதமாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக முதல்வர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. இதன்படி, நாளை காலை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இன்று மாலை, சிறப்பு விமானத்தில் டெல்லி செல்கிறார் ஸ்டாலின். மூன்று நாட்கள் அவர் டெல்லியில் தங்க உள்ளார்.
அதன் பின்பு பிரதமரின் இல்லத்தில், மோடியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின் போது, மு.க.ஸ்டாலின் என்னென்ன கோரிக்கைகளை முன் வைப்பார் என 35 முக்கிய விஷயங்களை பிரதமர் அலுவலகம் பட்டியலிட்டுள்ளது. இவை குறித்து பிரதமரிடம், அவரது முதன்மைச் செயலர், டாக்டர் பி.கே.மிஸ்ரா நாளை விளக்க உள்ளார். ஸ்டாலினும் தமிழக அரசியல், கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், நீட் போன்ற முக்கிய பிரச்சனைகளை குறித்து மோடியிடம் விளக்க உள்ளதாக அறிவாலய தகவல்.
அதைத் தொடர்ந்து ஸ்டாலினுடன், பிரதமர் தனியாக பேசுவதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் சுமுகமான உறவு இருக்க வேண்டும் என்பதே மோடியின் விருப்பம்' என பா.ஜ.க தரப்பு தகவல். அதை உறுதிப்படுத்தும் வகையில், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் ஸ்டாலினை அழைத்து வருவதற்கு தன் சிறப்பு பாதுகாப்பு படையின், 'புல்லட் புரூப்' காரை மோடி அனுப்ப உள்ளதாக தெரிகிறது.
இதுபோன்ற சிறப்பு கவுரவம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து, ஸ்டாலினுக்கு கிடைக்க உள்ளது.ஸ்டாலினின் பயணத்தை, தி.மு.க., மூத்த தலைவர் டி.ஆர். பாலு ஒருங்கிணைத்து வருகிறார். அவர் ஏற்கனவே டில்லியில் உள்ளார் என்பதும் குறிப்பிடித்தக்கது.
இன்று மாலை டெல்லி செல்லும் முதல்வருக்கு டில்லி விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க, தி.மு.க., திட்டமிட்டுள்ளது .இதற்காக சென்னையில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு டில்லி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. டில்லியின் முக்கிய சாலைகளில் இவை ஒட்டப்பட உள்ளன. இதைத் தவிர மூன்று இடங்களில், 'கட் அவுட்' வைக்கவும் அனுமதி பெறப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அமுதா, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலராக உள்ளார். ஸ்டாலின் எழுப்ப வாய்ப்புள்ள பிரச்னைகள் குறித்த, -'புல்லட் பாயின்ட்'களை அவர் தொகுத்துள்ளார். அது ஏற்கனவே பிரதமர் மேஜைக்கு சென்றும் விட்டது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்தின் தேவைகள் குறித்து பேச உள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் அவர் சந்திக்கிறார். மத்திய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கிறார். அரசியல் ரீதியில், காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோரை சந்திக்க உள்ளதாக திமுக தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.