காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் எம்பி ஜெர்மி கார்பினை சந்தித்தது குறித்து பாஜக-வினர் கடுமையாக சாடி வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்த அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்து வருகிறார் என்பது அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
கபில் மிஸ்ரா
"ராகுல் காந்தி லண்டனில் ஜெர்மி கார்பினுடன் என்ன செய்கிறார்? ஜெரமி கார்பின் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பிற்கு பெயர் போனவர். ஜெர்மி கார்பின் வெளிப்படையாக காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க பரிந்துரைக்கிறார்," என்று பாஜகவின் கபில் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார். .
ஷெஹ்சாத் பூனாவாலா
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, ராகுல் காந்தி கோர்பினுடன் சந்தித்ததற்காக கடுமையாக சாடினார், மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆண்டி-இந்திய கருத்து கொண்டவர்களை ஏன் சந்திக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் பிரச்சாரத்தை எதிரொலிக்கும் ஜெர்மி கார்பின் போன்ற இந்திய விரோத சக்திகளை சந்திப்பதா? சீனருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் சரி, சீனப் பணத்தை RGF இல் எடுத்தாலும் சரி அல்லது டோக்லாமில் சீனரை சந்தித்தாலும் சரி, நீங்கள் மோடியை விமர்சிக்கிறீர்கள். மோடி விரோதிகள் அனைவரும் தேச விரோதிகளே!" என்று ட்வீட் செய்துள்ளார்.
விஜய் சவுதைவாலே
பாரதிய ஜனதா கட்சியின் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் விஜய் சவுதைவாலேயும் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். "இங்கிலாந்தில் உள்ள இந்து எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகள் ராகுல் காந்தியிடமிருந்து வெளிப்படையான ஆதரவைப் பெறுகின்றன" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
பதிலடி
இவர்கள் கேட்ட கேள்வி அனைத்திற்கும் காங்கிரஸ் கட்சியினர் ஒரே அடியாக அடித்து பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் பலர் மோடி ஜெரமி கார்பினை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ரேஞ்சுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.