மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றுள்ளார். இன்று எழும்பூர், தாயகத்தில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வைகோவின் மகனும் மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ அறிவித்தது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துரை வைகோவின் முடிவுக்கு துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாதான் காரணம் என்று கூறப்பட்டது.

ராஜினாமா முடிவைத் திரும்பறப் பெற்ற துரை வைகோ

எனினும் துரை வைகோவின் முடிவைக் கட்சியின் தலைமை ஏற்கவில்லை. இந்த நிலையில் ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.

முன்னதாக மல்லை சத்யா கூறும்போது, "மதிமுகவின் துணை பொதுச் செயலளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யத் தயார். தேவைப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தி என்னைக் கட்சியில் இருந்தே நீக்கி விடுங்கள். கட்சியின் நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் நான் செயல்படவில்லை. தற்போது வரை வைகோவுக்கு துணையாகதான் உள்ளேன் துரை வைகோ அரசியலுக்கு வரவேண்டும் என முதன் முதலில் கூறியது நான்தான்" என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.