அரசியலில் விஜய்

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், அந்த வகையில் 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவர், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தான் தனது இலக்கு என தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்ப நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் இல்லை. யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.  இதனையடுத்து விக்கிரவண்டிமற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்திய விஜய், அடுத்ததாக மக்களை சந்திக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.

Continues below advertisement

மக்களை சந்திக்கும் விஜய்

இதற்கு ஏற்ப திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர். நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வெற்றிகரமாக மக்கள் சந்திப்பை முடித்த விஜய்க்கு, கரூரில் எதிர்பாராத சிக்கல் உருவானது. கரூரில் மதியம் 12 மணிக்கு மக்கள் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கு தான் விஜய் கரூர் வந்தடைந்தார். அப்போது அளவுக்கு அதிகமான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. இதனையடுத்து 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. 

சிபிஐ விசாரணையில் தவெக நிர்வாகிகள்

இதில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடி நிர்மல் குமாரிடம் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், திடீர் திருப்பமாக தவெக தலைவர் விஜய்யை நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அளித்தது. இதனையேற்ற விஜய் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றவர், காலை 11.29 மணியளவில் சிபிஐ அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வரவேற்பறையில் இருந்து நோட்டில் விஜய் காலை சரியாக 11.34 மணிக்கு கையெழுத்திட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தின் 10வது மாடிக்கு விஜய் அழைத்து செல்லப்பட்டார். அப்போது விஜய்யிடம் விசாரணை நடத்த 2 டிஎஸ்பிக்கள், 2 ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருந்துள்ளனர்.

Continues below advertisement

விஜய்யிடம் கேள்வி கேட்ட சிபிஐ

விஜய்யிடம் கேட்கப்படவுள்ள கேள்விகள் குறித்த கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் ஒரு வார்த்தையில் பதில் அளிக்கும் வகையில் அதாவது, ஆமாம், இல்லை என்கிற வகையில் கேள்விகள் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு சில கேள்விகள் விளக்கமாக பதில் அளிக்கும் வகையிலும் கேள்விகள் இடம்பெற்றிருந்துள்ளது. அந்த வகையில் விஜய்யிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியாக உங்களது பெயர் என்ன என்பது தான்.  அந்த வகையில் தனது பெயர் விஜய் என பதிலளித்துளார். இதனை தொடர்ந்து கரூருக்கு எத்தனை மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது, கரூர் நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் எத்தனை மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டீர்கள்.?  கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்? என அடுத்தடுத்து 50 முதல் 60 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு தனது வழக்கறிஞரின் துணையோடு விஜய் பதிலளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.