மேற்கு வங்காளத்தின் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி. துர்க்கை சிலைகளை மம்தா பானர்ஜியைப் போல சிற்பிகள் வடிவமைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மூத்த தலைவர்கள், ட்விட்டரில் மம்தா பானர்ஜியின் கைகளில் வங்காள மக்களின் ரத்தம் இருப்பதாகவும், அவர் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளனர். 


பாஜகவின் தேசிய ஐ.டி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், “மம்தா பானர்ஜியை சிலையாக மாற்றியிருப்பது குமட்டலை வரவழைக்கிறது. மம்தா பானர்ஜியின் கைகளில் தேர்தலுக்குப் பின் நிகழ்ந்த வன்முறையில் இறந்த அப்பாவி வங்காள மக்களின் ரத்தம் இருக்கிறது. இது கடவுள் துர்க்கைக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அவமானம். மம்தா பானர்ஜி இவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வங்காளத்தில் வாழும் இந்துக்களின் உணர்வுகளை அவர் காயப்படுத்துகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். 



மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், நந்திகிராம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியின் தற்போதைய மௌனத்தை விமர்சித்துள்ளார். “உங்களை மகிழ்விக்க, உங்களை யாராவது கடவுளின் நிலைக்கு உயர்த்தும் போது, நீங்கள் மௌனமாக இருந்தால், அது உங்கள் சம்மதத்தைக் குறிக்கும். இதன் பொருள், உங்கள் அகங்காரம் உங்கள் மனசாட்சியால் கட்டுப்படுத்த இயலாத இடத்திற்குச் சென்றுவிட்டது” என்று கடுமையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் சுவேந்து அதிகாரி. 






 


மேற்கு வங்காளத்தில் துர்க்கை பூஜை நிகழ்ச்சிகளை நடத்தும் மூன்று துர்கா பூஜா சமிதிகள் இந்தாண்டின் துர்க்கை சிலையை முதல்வர் மம்தா பானர்ஜியின் உருவத்தைப் போல செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். “வங்காளத்தில் வாழும் அனைவரும் அவரை துர்கா தேவியாகக் கருதுகிறோம். அவர் மக்களுக்குச் செய்த நன்மைகளைப் பிற பகுதிகளில் யாரும் மக்களுக்குச் செய்யவில்லை” என்று கூறியுள்ளார் நஸ்ருல் பார்க் உன்னாயன் சமிதியின் துணைத் தலைவர் பார்த்தா சர்கார். இந்த அமைப்பு துர்க்கை பூஜை நிகழ்ச்சியை முன்னின்று நடத்தவுள்ளது. 



துர்க்கை சிலையின் மாடல்


 


Crowdnxt Mediia Art என்ற அமைப்பு, துர்க்கை சிலைகளைச் செய்வதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் திபன்விதா பக்சி, ஒவ்வொரு சிலையும் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை எனக் கூறியுள்ளார். மேலும், “துர்க்கையின் 10 கைகளும் மம்தா அரசின் மக்கள் நலத் திட்டங்களைக் குறிக்கின்றன” என்று விளக்கம் தந்துள்ளார். 


மேற்கு வங்காள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகை துர்கா பூஜை. இது ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த பக்தியோடும், மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. எனினும், கடந்த சட்டமன்றத் தேர்தல்களால், மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கடுமையான மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களில் ராமருக்கும், துர்க்கைக்கும் எதிரான தேர்தலாக முன்னிறுத்தப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை முன்வைத்த போது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி `டெல்லியில் இருந்து வந்திருக்கும் மஹிசாசூர்களை வங்காளத்தில் வீழ்த்துவோம்’ என்று துர்க்கையால் வீழ்த்தப்பட்ட மஹிசாசூர்களை பாஜகவினரோடு ஒப்பிட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு, முஹர்ரம் ஊர்வலத்தை முன்னிட்டு, துர்க்கை சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுவதை மம்தா பானர்ஜி அரசு தடை விதித்த போதும், இதே போன்ற விமர்சனங்களை முன்வைத்தது மேற்கு வங்க பாஜக.