தஞ்சாவூர்: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று நீதிமன்றம் கூறவில்லை. நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது என்று தஞ்சாவூரில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.



தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என்ற தீர்ப்பை வழங்கி ஓ. பன்னீர்செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.

எடப்பாடி தலைமையில் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில், இரு தரப்பு வாதங்களும் நீதிபதிகள் முன்பு வைத்தனர். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த தடையையும் உச்சநீதிமன்றம் நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 2023ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்கும், அதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதிக்கும், வழக்கினை மீண்டும் ஒத்திவைத்தது. கடந்த 16ஆம் தேதி இரு தரப்பையும் எழுத்து பூர்வமான பதிலை கேட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் இருக்கப்போகிறது என்பதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.  

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் கட்சி எடப்பாடிக்கு தான் என தெரிய வந்துள்ளது. இதனால் உற்சாகம் வெள்ளத்தில் மூழ்கிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி படத்திற்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். வருகின்றனர். அதேபோல் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் தஞ்சையில் கூறியதாவது: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சொன்னது போல சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கிறது. பொதுக்குழு கூட்டியது செல்லும் என்று. ஆனால் சிவில் கோர்ட்டில் உள்ள வழக்கு எங்களது கருத்து கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்கிறார்கள். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சொல்லவில்லை.

நாங்கள் தீர்மானங்களை எதிர்த்து மேல்முறையீட்டு செய்வோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பு கிடையாது. முழு தீர்ப்பை பார்த்ததுக்கு பிறகு முழு நடவடிக்கை எடுத்து சொல்வோம். சிவில் கோர்ட்டில் வழக்கு இருக்க அது அவங்களுடைய கருத்துக்களை கட்டுப்படுத்தாது என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி என்றால் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான். இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.