1989ல் முதலமைச்சர் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்துக்கொண்டிருந்தார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தார் ஜெயலலிதா. தான் எது நினைத்தாலும் அது தனக்கு உடனே கிடைக்க வேண்டும் என நினைப்பவர் ஜெயலலிதா. எப்படியாவது இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு தான் முதலமைச்சராக வேண்டும் என நினைக்கிறார். ஒரு அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் போனாலோ, தாக்கல் செய்வதற்கு முன்னால் லீக் ஆனாலோ  பதவியேற்கும்போது எடுத்துக் கொள்ளும் ரகசிய காப்பு உறுதிமொழியிலிருந்து தவறி விட்டார்கள் என ஆட்சியை கலைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதையடுத்து பட்ஜெட்டை படிக்க விடாமல் செய்ய வேண்டும், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஜெயலலிதாவால் திட்டம் தீட்டப்படுகிறது. 




 


இந்த சூழலில் இன்னொரு பக்கம்,  வாக்குகள் ஜெயலலிதா அதிமுக- ஜானகி அதிமுக என பிரிந்ததால் ஆட்சியமைக்க முடியாமல் போன விரக்தியில் அரசியலை விட்டு ஒதுங்குவதாக முன்னதாக ஒரு முடிவெடுக்கிறார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதமும் எழுதுகிறார். ஆனால் இந்த முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் எனக்கூறி அந்த கடிதத்தை கொடுக்கவிடாமல் தடுக்கிறார் சசிகலா. அந்த கடிதம் சசிகலாவின் கணவர்  நடராஜன்  வீட்டில் இருந்துள்ளது. அந்த சமயத்தில் பிஆர்வோ பொறுப்பில் இருந்திருக்கிறார் நடராஜன். அவரின் வீட்டில் ரெய்டு நடத்தி ஜெயலலலிதாவின் கடிதத்தைக் கைப்பற்றுகிறது திமுக அரசு. இந்த விவகாரம் ஜெயலலிதாவை இன்னும் ஆத்திரபடுத்தியது. எனவே இந்த பிரச்சினையை காரணம் காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் செய்ய திட்டமிட்டார்.




நிதியமைச்சராகவும் இருந்த கலைஞர் பட்ஜெட்டை படிக்க தொடங்குகிறார். அந்த நேரத்தில் தன்னுடைய  கடிதத்தை எடுத்ததை உரிமை மீறல் பிரச்சினையாக எடுத்து விவாதிக்க வேண்டும் என அவையில் சொல்கிறார் ஜெயலலிதா. ஆனால், சபாநாயகரோ பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அதை பற்றி பேசுவோம். பட்ஜெட் வேலையை முதலில் முடிப்போம் என்கிறார்.  இந்த சூழலில் கலைஞர் தொடர்ந்து பட்ஜெட் படிக்கிறார். க்ரிமினல், பட்ஜெட்டை படிக்கக்கூடாது என சொல்லி ஜெயலலிதா பிரச்சினை கிளப்புகிறார். இப்போதும்   அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கருணாநிதியை பாய்ந்து போய்த் தாக்குகிறார். அதில் கலைஞரின் கண்ணாடி கீழே விழுந்து உடைகிறது. தலைவர் தாக்கப்பட்டதை அறிந்ததும் திமுகவினரும் பதில் தாக்குதல் நடத்தினர். ஆனால் தலைவிரிகோலத்தோடு வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா ஒரு பக்க கதையை மட்டும் சொல்லியிருக்கிறார். தான் தாக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அவையை விட்டு வெளியே வரும் வரை அவரது சேலை கூட கசங்கவில்லை என திமுகவினர் தெரிவிக்கிறார்கள். வரலாறு இப்படியிருக்க சட்டசபையில் ஜெயலலிதா தரையில் தள்ளப்பட்டு தாக்கப்பட்டது போன்றும், சேலை கிழிக்கப்பட்டது போன்றும் துவக்கத்திலேயே பரிவைக் கோருகிறது படம்.




இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஜெ. பக்கம் இருந்த எம் எல் ஏக்களில் சேவல் சின்னத்தில் ஜெயித்த திருநாவுக்கரசர் முக்கியமானவர்.  அவர் தொண்ணூறுகளிலேயே ஜெயலலிதாவை விட்டு விலகிவிட்டார். சட்டசபையில் என்ன நடந்தது. இதற்காக முதல் நாள் ஜெயலலிதாவால் என்ன திட்டம் தீட்டப்பட்டது,  அது எப்படி செயல்படுத்தப்பட்டது. முதல் தாக்குதல் யார் பக்கத்திலிருந்து துவங்கியது என ஜெயலலிதாவுடன் இருந்த அவரே வரலாற்றைப் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி செயல்பட்ட  திமுக அரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  1991ம் ஆண்டு, ஜனவரி 30ல் கலைக்கப்பட்டது.


அடுத்தப்பகுதியைப் படிக்க > Thalaivii | தலைவி படம்.. ரீலில் வந்தது என்ன? ரியலில் நடந்தது என்ன? முழு அலசல்!