குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக  பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


குஜராத் முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி நேற்று ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பதவியேற்பார் என்றும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். 






 


காந்தி நகரில் நடைபெற்ற பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பூபேந்திர படேல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். காட்லோடியா தொகுதி பாஜக எம்எல்ஏவான பூபேந்திர படேல், குஜராத்தின் 17ஆவது முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். மேலும், நாளை புதிய அரசு பதவியேற்கும் என பாரதிய ஜனதா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


”பூபேந்திர படேல் திறமையானவர். வரவிருக்கும் தேர்தலில் அவரது தலைமையில் பாஜக வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று விஜய் ரூபானி கூறியுள்ளார்.






 


முன்னதாக,  பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு கட்சியின் மத்திய பார்வையாளர்களாக குஜராத்துக்கு இரண்டு மத்திய அமைச்சர்கள் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் நரேந்திர சிங் தோமரை பாஜக அனுப்பியது.


மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பாஜக குஜராத் தலைவர் சி.ஆர்.பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்திற்காக காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.


ராஜ் பவனில் ஆளுநர் ஆச்சார்யா தேவவ்ராத்திடம் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால், குஜராத்தில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜினாமாவை சமர்ப்பித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ரூபானி, மாநில முதல்வராக பணியாற்ற தனக்கு வாய்ப்பளித்த பாரதீய ஜனதா தலைமைக்கு நன்றி என்று கூறினார்.


கடந்த ஆறு மாதங்களில் மாற்றப்பட்ட பாஜக ஆளும் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் ரூபானி ஆவார். முன்னதாக, உத்தரகாண்டில் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் திரத் சிங் ராவத் மற்றும் கர்நாடகாவில் பிஎஸ் எடியூரப்பா ஆகியோர் முதல்வர் பதவிகளில் இருந்து மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிதாக நியமிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராஜ்யசபா எம்பி பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் துணை முதல்வர் நிதின் ரதிலால் பட்டேல் மற்றும் குஜராத் பாஜக தலைவர் சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் ஆகியோர் அடுத்த குஜராத் முதல்வராக பதவியேற்க உள்ளதாக வதந்தி பரவியதும் குறிப்பிடத்தக்கது.