தமிழகம் முழுவதும் நேற்று 234 தொகுதிகளிலும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முமுவதும் 72 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் வாக்குகள் பதிவாகியிருந்தது.


இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளவின் வீதத்தை தலைமைத் தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நடந்த வாக்குப்பதிவின்படி, மாநிலம் முழுவதும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.




அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக, சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.




அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகளும், மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ள முதல் 5 தொகுதிகள் சென்னையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது