மயிலாடுதுறையில் அன்பகம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி என்பவர் தன்னம்பிக்கையுடன் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அவருக்கு கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த நிலையில் கடந்த மாதம் ஜூன் 22ம் தேதி வி.கே.சசிகலா தொலைபேசியில் லட்சுமியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து நேரில் வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று மயிலாடுதுறையில் உள்ள அன்பகம் காப்பகத்திற்கு வந்து மாணவி லட்சுமியை நேரில் பாராட்டினார்.
காப்பகத்திற்கு வந்த வி.கே.சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக மாணவிகள் வரவேற்பு பாடல் பாடி வரவேற்றனர். தொடர்ந்து இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமிக்கு ரூபாய் ஐந்தாயிரம் காப்பகத்திற்கு ரூபாய் ஒரு லட்சமும் வழங்கினார். தொடர்ந்து காப்பகத்தில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமிகள் குழந்தைகளையும் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பொதுச் செயலாளராக போட்டியிடுகிறீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு நான் ஏற்கனவே பொதுச்செயலாளர் தான் அவர்கள் தான் சண்டை போடுகிறார்கள் என்றார். மேலும் தொடர்ந்து பேசியவர் அதிமுக பொன்விழா ஆண்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை அளிப்பது எனக்குமட்டுமல்ல கழக தொண்டர்களும். பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.
திமுக அரசு தேர்தலில் அளித்த பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை, மின்வெட்டு பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரசித்திபெற்ற கோயில் நுழைவாயியில் பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் பாசிமணி விற்பனை செய்வதை ஆளும்கட்சியினர் தடுக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சி என்று சொல்பவர்கள் தற்போது உட்கட்சிக்குள்ளே சண்டை போடுவதால் வருகின்ற தேர்தலில் பொதுமக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் என்று கேள்வி எழுப்பினார். அதனைபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அதனால்தான் நான் சுற்றுப்பயணம் செய்வதால் மக்கள் தங்கள் கருத்துக்களை என்னிடம் தெரிவிக்கின்றனர். அதிமுகவினர் முதலில் ஒழுங்காக இருக்க வேண்டும் . தலைவர் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளக் கூடாது. கட்சி தலைவராக யார் இருக்க வேண்டுமென்று கழக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் விரும்ப வேண்டும், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் அதனை சொல்ல வேண்டும் என்றார். எங்கள் தலைமை கழகம் நான் எப்படி போகாமல் இருப்பேன் நிச்சயம் அங்கு செல்வேன் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்