கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானியக்கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது, 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய பாஜகவின் வானதி சீனிவாசன், ”கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழகத்தில் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவிலே எந்தவொரு கட்சிகளும் அரசாங்கத்தை ஐந்தாண்டுகள் முழுமையாக நடத்திவிட முடியாது என்கின்ற கருத்தியில் இருந்த காலகட்டத்தில், ஐந்தாண்டுகாலம் மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, கமலாலய தலைவர்களோடு கூட்டணி வைத்து, அத்தனை தலைவர்களையும் அரவணைத்து அந்த ஆட்சியை ஐந்தாண்டுகாலம் வெற்றிகரமாக நடத்திச் செல்ல உறுதுணையாக இருந்த தலைவர் கலைஞர், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதும், பிரதமர் அவர்கள் நேரடியாக வந்து கோபாலபுரத்தில் பார்த்ததும், அதே போல கலைஞரின் அரசியல் ஆளுமை காரணமாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாதபோதும், பாஜக தலைமையிலான மத்திய அரசு அந்த நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து மரியாதை செய்ததும் அரசின் மாண்பின் வழியாக இதைப்பார்த்து வரவேற்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “பிரதமர் மோடி மட்டும் கோபாலபுரத்திற்கு வரவில்லை. யாரெல்லாம் பிரதமராக இருந்தார்களோ அவர்களெல்லாம் கோபாலபுரத்திற்கு வந்து பேசி உள்ளனர். மன்மோகன் சிங் வந்திருக்கிறார், வருங்கால பிரதமர் வந்து வாழ்த்து பெற்று சென்றிருக்கிறார். பெருமைக்குரிய தலைவருக்குத்தான் விழா எடுக்கிறோம். காங்கிரஸ் இதை வரவேற்கிறது” என தெரிவித்திருக்கிறார்.
வீடியோவைக் காண:
இப்படி மாறி மாறி கருத்துகள் வெளியாகி வந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசும்போது, “ஒரு ப்ரோகிராம் போட்டு, அதற்குள் வாஜ்பாயை வரவைத்துதான் இவர் நகர்கிறார். இது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம். எந்நிலையிலும், தன்நிலையை இழக்காத மாபெரும் தலைவர் கலைஞர்” என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்